தேயிலை தோட்டத்தில் உலா வந்த காட்டு யானைகள்
வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் உலா வந்தன.
வால்பாறை
வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் உலா வந்தன.
காட்டு யானைகள் முகாம்
காலநிலை மாற்றத்தின்போது கேரள வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் இடம்பெயர்ந்து வால்பாறை வனப்பகுதிக்கு வரும். இவ்வாறு வரும் காட்டு யானைகள் தேயிலை தோட்டம், எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டுவது வழக்கம். இவ்வாறு முகாமிடும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் 2-வது பிரிவு 10-ம் நம்பர் தேயிலை தோட்ட பகுதியில் பட்டப்பகலில் 6 குட்டிகளுடன் 19 யானைகள் கூட்டம் முகாமிட்டு நின்றன.
தேயிலை இலை பறிக்கும் பணி பாதிப்பு
காலையில் தேயிலை இலை பறிக்க சென்ற தொழிலாளர்கள் யானைகள் முகாமிட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுிறத்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எஸ்டேட் நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து தொழிலாளர்களை பாதுகாப்பை கருதி, வேறு இடத்திற்கு பணிக்கு அனுப்பி வைத்தனர். தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டதால், தேயிலை இலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது.
எஸ்டேட் நிர்வாகங்களுக்கு அறிவுரை
வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால், தேயிலை தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களை பணிக்கு அனுப்பும் போது அந்த பகுதியில் யானைகள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை கண்டறிந்து பணிக்கு அனுப்ப வேண்டும் என்றும், அதிகாலை நேரத்தில் பணிக்கு செல்பவர்களுக்கும் நள்ளிரவில் தேயிலை தொழிற்சாலை பணிக்கு செல்லும் தொழிலாளர்களுக்கும் உரிய வாகன வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும் வனத்துறையின் சார்பில் அனைத்து எஸ்டேட் நிர்வாகங்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ரேஷன் கடைகளில் அதிகளவிலான ரேஷன் பொருட்களை இருப்பில் வைக்க வேண்டாம் என்றும் வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.