குட்டிகளுடன் ரோட்டில் உலா வந்த காட்டு யானைகள்


குட்டிகளுடன் ரோட்டில் உலா வந்த காட்டு யானைகள்
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:46 PM GMT)

தொண்டாமுத்தூர் அருகே குட்டிகளுடன் ரோட்டில் காட்டு யானைகள் உலா வந்தன

கோயம்புத்தூர்


தொண்டாமுத்தூர், ஜன.25-

கோவையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை தொண்டாமுத்தூர் அருகே யானைமடுவு வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளன. இதில் குட்டிகளுடன் 5 காட்டு யானைகள் நேற்று அதிகாலையில் தாளியூர் பகுதிக்குள் புகுந்தது.

அவை, தாளியூர் பள்ளம் வழியாக கருப்பராயன் கோவில் பகுதியில் முகாமிட்டு நின்றது. இதை பார்த்து அங்கு நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர்.

மேலும் யானைகள் கூட்டமாக அங்குள்ள ரோட்டில் உலா சென்றன.

இது குறித்த தகவலின் பேரில் வனத்துறையினர் பல மணி நேரம் தாமதமாக சம்பவ இடத்திற்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் யானையை சுடுகாட்டு பள்ளம் வழியாக வனப்பகுதி நோக்கி விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் யானைகள் வனப் பகுதிக்குள் செல்லாமல் போக்கு காட்டி அதே பகுதியில் சுற்றி சுற்றி வந்தது. இதனால் நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனத் துறையினர், யானை கூட்டத்தை வனப்பகுதியை நோக்கி விரட்டினர்.

அதை சிலர் தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர்.

மேலும், அட்டுக்கல் மலைவாழ் கிராமத்தில், கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டம் அதி கரித்து உள்ளது.

இதனால் அங்குள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் எச்சரிக்கையுடன், செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story