தாய்முடி எஸ்டேட்டில் உலா வந்த காட்டு யானைகள்
வால்பாறையில் பட்டப்பகலில் காட்டு யானைகள் உலா வந்தன.
வால்பாறை
வால்பாறைக்கு கேரள வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வரும் காட்டு யானைகள் தேயிலை தோட்டங்கள், எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு வருகின்றன. இந்த யானைகள் அவ்வபோது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கெஜமுடி எஸ்டேட் பகுதியில் குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தன.
இந்த காட்டு யானைகள் நேற்று தாய்முடி எஸ்டேட் பகுதியையொட்டி உள்ள வனப்பகுதிக்கு, சாலையை கடந்து சென்றது. பட்டப்பகலில் யானைகள் உலா வந்ததை கண்ட தேயிலை தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். அந்த பகுதியில் தேயிலை இலை பறிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன.
இதற்கிடையில் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் கெஜமுடி, தாய்முடி ஆகிய எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு சுற்றித்திரியும் காட்டு யானைகளால் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காட்டு யானைகளை தொழிலாளர்கள் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் 5-வது நாளாக மக்னா யானை பச்சை மலை, நடுமலை எஸ்டேட் பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் முகாமிட்டு வருகிறது.