டீக்கடை, வீட்டை உடைத்த காட்டு யானைகள்


டீக்கடை, வீட்டை உடைத்த காட்டு யானைகள்
x
தினத்தந்தி 23 Oct 2022 6:45 PM GMT (Updated: 23 Oct 2022 6:45 PM GMT)

வால்பாறையில் காட்டு யானைகள் புகுந்து டீக்கடை மற்றும் வீட்டை உடைத்தன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை,

வால்பாறையில் காட்டு யானைகள் புகுந்து டீக்கடை மற்றும் வீட்டை உடைத்தன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

காட்டு யானைகள்

வால்பாறை பகுதியில் 25-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தாய்முடி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு வருகின்றன. அங்குள்ள மகளிர் சுய உதவிக்குழு ரேஷன் கடையை தொடர்ந்து 2 நாட்களாக யானைகள் உடைத்து, ரேஷன் அரிசியை தின்றன. இந்தநிலையில் தாய்முடி எஸ்டேட் புதிய காடு தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் யானைகள் புகுந்தன. தொடர்ந்து வெள்ளப்பாண்டி என்பவரது டீக்கடையை உடைத்தன.

மேலும் கடைக்குள் இருந்த அனைத்து பொருட்களையும் சூறையாடியது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். இதேபோல் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் நடுமலை எஸ்டேட் தேயிலை தோட்டத்தை ஒட்டிய வனப்பகுதியில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டு இருந்தது. பின்னர் வால்பாறை நகர் கூட்டுறவு காலனி குடியிருப்புக்குள் யானை புகுந்து, ஜோலி என்பவரது வீட்டின் சுவரை உடைத்தது.

வனப்பகுதிக்குள் விரட்டினர்

அங்குள்ள தோட்டத்தில் இருந்த வாழை மரங்களை தின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோலி, அவரது மனைவி வீட்டில் பதுங்கி கொண்டனர். மேலும் வால்பாறை வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனச்சரகர் வெங்கடேஷ், வேட்டை தடுப்பு காவலர்கள், மனித-விலங்கு மோதல் தடுப்பு குழுவினருடன் சம்பவ இடத்துக்கு வந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் காட்டு யானை ஜோலி என்பவரது வீட்டு சுவரை உடைத்தது குறிப்பிடத்தக்கது. கூட்டுறவு காலனி குடியிருப்புக்குள் காட்டு யானை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகள் ரேஷன் கடை, வீடுகளை உடைத்து சேதப்படுத்துவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.


Next Story