காட்டாற்று வெள்ளம்: கும்பக்கரை அருவியில் சிக்கித்தவித்த சுற்றுலாப் பயணிகள் மீட்பு..!


காட்டாற்று வெள்ளம்: கும்பக்கரை அருவியில் சிக்கித்தவித்த சுற்றுலாப் பயணிகள் மீட்பு..!
x

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும்.

இங்கு தேனி மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. இதனால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இந்நிலையில், இன்று வாரவிடுமுறையையொட்டி கும்பக்கரை அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அருவியில் ஆனந்த குளியல் போட்டனர். இந்நிலையில் அருவியில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. அருவியில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 30-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கி தவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக களத்தில் இறங்கிய வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் வெள்ளம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றனர். யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் வந்த வெள்ளத்தால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். மேலும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.


Next Story