வனவிலங்குகள் கணக்கெடுப்பு நிறைவு
வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நிறைவடைந்தது. நாளை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
வால்பாறை
வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நிறைவடைந்தது. நாளை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
கோடைகால கணக்கெடுப்பு
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி, பொள்ளாச்சி ஆகிய 4 வனச்சரகங்களில் கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 24-ந் தேதி தொடங்கியது. முதல் மூன்று நாட்களுக்கு 2 கிலோ மீட்டர் தூர அளவில் பெரிய தாவர உண்ணிகள் கணக்கெடுக்கப்பட்டது. தொடர்ந்து இன்று வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு 32 நேர்கோட்டு பாதையில் மாமிச உண்ணிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
அறிக்கை
இன்று வால்பாறை வனச்சரக வனப்பகுதியில் நடைபெற்ற கணக்கெடுக்கும் பணி, வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் எச்சம், கால்தடம், மரத்தின் மீது ஏற்பட்டு இருந்த நகக்கீறல்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டது. காட்டெருமைகள் நேரில் பார்த்து கணக்கெடுக்கப்பட்டது.
இந்த பணி இன்றுடன் முடிவடைந்தது. நாளை(செவ்வாய்க்கிழமை) கணக்கெடுப்பின் விவரங்கள் அடங்கிய அறிக்கையை அட்டகட்டி பகுதியில் உள்ள வனமேலாண்மை பயிற்சி மையத்தின் அலுவலகத்தில் ஒப்படைக்கும் பணி நடைபெறுகிறது.
தீவிர கண்காணிப்பு
இதேபோன்று மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில், வனத்துறையினர் கவனம் செலுத்த வேண்டிய வனப் பகுதியை அறிந்து கொள்வது, வனவிலங்குகளுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, தாவர உண்ணிகளின் தேவைகள், மாமிச உண்ணிகளின் தேவைகளை மேம்படுத்துதல், வனவிலங்குகளின் வாழ்விட பராமரிப்பு, இனப்பெருக்கத்தின் அடிப்படையில் தீவிர கண்காணிப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.