வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது


வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

கோயம்புத்தூர்

வால்பாறை

மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

வனவிலங்குகள் கணக்கெடுப்பு

ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் உத்தரவின் பேரிலும், துணை கள இயக்குனர் அறிவுரையின் பேரிலும் தேசிய புலிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி பருவமழைக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நேற்று முதல் வருகிற 12-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்கான பயிற்சி வகுப்பு, நேற்று முன்தினம் அட்டகட்டியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனமேலாண்மை பயிற்சி மையத்தில் நடத்தப்பட்டது. மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரகர்கள் மணிகண்டன், வெங்கடேஷ் தொடங்கி வைத்தனர்.

சிங்கோனா வனப்பகுதியில் நேர்கோட்டு பாதையில் நடைபெற்ற கணக்கெடுப்பு பணியில் காட்டெருமைகள் நேரடியாக பார்த்து பதிவு செய்யப்பட்டது. மேலும் சிறுத்தைப்புலியின் எச்சம் சேகரிக்கப்பட்டது.

டி.என்.ஏ. பரிசோதனை

இது தவிர வனவிலங்குகளின் கால்தடம், எச்சம், மரங்களில் ஏற்பட்டுள்ள நகக்கீறல்கள் மற்றும் வனப்பகுதியின் அடர்த்தி, தாவரங்களின் வளர்ச்சி, அந்நியர்கள் நடமாட்டம், தாவர உண்ணிகளுக்கு தேவையான உணவின் நிலை, களைச்செடிகள் நிலை குறித்து கணக்கெடுப்பில் விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

இந்த முறை கணக்கெடுப்பில் முதல் முறையாக சென்னை வண்டலூர் நவீன வனவிலங்குகள் பாதுகாப்பு மையத்தின் வனவிலங்குகள் ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறுத்தைப்புலிகளின் எச்சங்களை மட்டும் சேகரித்து அதனுடைய டி.என்.ஏ. பரிசோதனை மூலம் கணக்கெடுப்பை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story