தவிட்டுப்பாளையம் காவிரி கரையோரம் தடுப்பு சுவர் கட்டித்தரப்படுமா?


தவிட்டுப்பாளையம் காவிரி கரையோரம் தடுப்பு சுவர் கட்டித்தரப்படுமா?
x

வெள்ளப் பாதிப்பின்போது வீட்டை காலி செய்யும் நிலை உள்ளது. இதனால் தவிட்டுப்பாளையம் காவிரி கரையோரம் தடுப்பு சுவர் கட்டித்தரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்

வெள்ளம் புகுந்து விடுகிறது

கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்று படுகை அருகில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகின்றனர்.இங்கு வசிப்பவர்கள் கூரை, ஓடு, ஆஸ்பெஸ்ட்டாஸ் சீட்டாலான வீடுகளில் குடியிருந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவில் கனமழை பெய்து அங்குள்ள அணைகள் நிரம்பி அங்கிருந்து வெளியேற்றப்படும் வெள்ள நீர் மேட்டூர் அணைக்கு வந்து அங்கிருந்து ஏராளமான வெள்ள நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

அப்போது காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டும் கொண்டு அதிகமான வெள்ளம் வரும்போது தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரி கரையோரம் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் குடியிருப்பு வாசிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

ஒவ்வொரு முறையும் வெள்ளம் வரும்போது காவிரிக்கரை ஓரம் குடியிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அங்குள்ள சேவை மையம் மற்றும் சமுதாயக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டு வருவாய்த்துறை மூலம் அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளம் வடிந்த பிறகு அவர்களது வீடுகளுக்குச் சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதனால் ஒவ்வொரு முறையும் காவிரி ஆற்றில் வெள்ளம் வரும்போது தொடர்ந்து இந்த 150 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். வெள்ளம் வரும்போது வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரால் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த காவிரி கரை நெடுகிலும் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்பது இந்த பகுதி பொதுமக்களின் வேண்டுகோளாக இருந்து வருகிறது.

கோரிக்கை

நஞ்சை புகழூர் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கதவணை பணிகள் முடிவுற்று செயல்படுத்தும்போது சுமார் 1 டி.எம்.சி. தண்ணீர் தேங்கி நிற்கும். அப்போது தவிட்டுப்பாளையம் பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து தொடர்ந்து தேங்குவதால் பொதுமக்களுக்கு மிகவும் பாதிப்பு உண்டாகும். எனவே விரைந்து காவிரி ஆற்றின் கரையோரம் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்விவரம் பின்வருமாறு:-

வீட்டை காலி செய்கிறோம்

தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதாசிவம்:-

காவிரி ஆற்றில் ஒவ்வொரு முறையும் வெள்ளம் வரும்போது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து குடியிருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு மேடான பகுதிக்கு செல்வதுடன், ஆடு, மாடுகளையும் வேறொரு பகுதிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் நாங்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடுக்கப்படவில்லை

ரெங்கநாதன்:-

காவிரி ஆற்றுப் பகுதியில் நாங்கள் 60 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் காவிரி ஆற்றில் வெள்ளம் வரும்போது வீடுகளுக்கு வெள்ளம் புகுவதால் தொடர்ந்து 10 நாள், 15 நாட்களுக்கு மேல் நாங்கள் கடும் அவதி அடைந்து வருகிறோம். வருவாய்த்துறை அதிகாரிகள் மூலமாக எங்களை இப்பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைத்து 3 வேளையும் எங்களுக்கு சாப்பாடு தருகிறார்கள். ஆனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவது தடுக்கப்படவில்லை.

வேலைக்கு செல்ல முடியவில்லை

சண்முகம்:-

காவிரி கரையோர பகுதியில் உள்ள எங்களது வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து தொடர்ந்து பாதிப்படைந்து வருகிறோம். நீண்ட நாட்களாக வெள்ளநீர் வடியாத நிலையில் மண் சுவர் உள்ள வீடுகள் இடிந்து விழுந்து விடுகிறது. மேலும் வெள்ள நீர் வடியும் வரை நாங்கள் கூலி வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. வேலைக்கு சென்றால் மட்டுமே எங்களுக்கு சாப்பாடு என்ற நிலையில் உள்ளோம். பொதுப்பணித்துறை அதிகாரிகள் எங்களுக்கு மாற்று இடத்தில் வீட்டு மனை வழங்கி வீடு கட்டி தர வேண்டும். அப்போதுதான் இந்த வெள்ள நீர் பாதிப்பில் இருந்து நாங்கள் விடுபடுவோம்.

இதுவரை நடவடிக்கை இல்லை

சமூக அலுவலர் விஜயகுமார்:-

காவிரி ஆற்றில் வரும் வெள்ளம் புகுந்து தொடர்ந்து 150-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் பாதிப்படைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் வெள்ளம் வந்தபோது சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் இங்கு வந்து பார்வையிட்டு தடுப்புச் சுவர் கட்டி தருவதாக உறுதி அளித்தனர்.ஆனால் வந்து பார்த்து விட்டு சென்றதோடு சரி அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து காவிரி கரையோரம் தடுப்பு சுவர் எழுப்பி வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

விரைவில் பணி தொடங்கும்

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப் பகுதியில் வெள்ளம் புகுந்தபோது அங்கு சென்று ஆய்வு செய்தோம். அப்போது வெள்ளம் புகுவதை தடுக்க அப்பகுதி பொதுமக்கள் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்படி காவிரி கரையோரம் 156 மீட்டர் நீளமும், 5 மீட்டர் உயரமும் கொண்ட தடுப்புச் சுவர் அமைக்கப்படும். அதற்கான திட்ட வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பப்பட உள்ளது. திட்ட அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்த பின் பணிகள் தொடங்கப்பட உள்ளது, என்றனர்.


Next Story