விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படுமா?
விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது தென் மாவட்டங்களில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்த நிலையில் அதனை தொடர்ந்து கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
நிதி ஒதுக்கீடு
இதையடுத்து முதல் கட்டமாக ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொது மருத்துவக்கல்லூரி இல்லாமல் பல் மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி வழங்க முடியாது என இந்திய மருத்துவ குழு தெரிவித்த நிலையில் தற்போது பொது மருத்துவக்கல்லூரி தொடங்கி செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையில் விருதுநகர் மருத்துவக்கல்லூரி அருகே பல் மருத்துவக்கல்லூரி தொடங்க 8 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு பல் மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் தலைமையிலான குழு நேரடியாக வந்து ஆய்வு செய்து இதற்கான அலுவலகமும், விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தொடங்கப்பட்டது. இந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் பல் மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கியது.
தொடங்கப்படாத நிலை
தற்போது தமிழக அரசு சிவகாசியில் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது மாவட்ட மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் அறிவிப்பு என்றாலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல் மருத்துவக்கல்லூரி இன்னும் தொடங்கப்படாத நிலையில் உள்ளது ஏன்?் என்று தெரியவில்லை.
எனவே தமிழக அரசு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல் மருத்துவக்கல்லூரியினை விருதுநகரில் தொடங்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்காலிகமாக விருதுநகர் பொது மருத்துவக்கல்லூரியிலேயே வகுப்புகளை தொடங்கி பின்னர் தனி கட்டிடங்கள் கட்டப்பட்ட பின்பு அங்கு பல் மருத்துவக்கல்லூரியினை முற்றிலுமாக முழுமையாக செயல்பட ஏற்பாடு செய்யலாம் என்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தென்மாவட்ட மக்கள்
பல்மருத்துவக்கல்லூரி அமைவது குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்விவரம் வருமாறு:-
விருதுநகர் கல்வியாளர் ஷேக் மெகபூப்:-
தென் மாவட்டங்களில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவிப்பை தொடர்ந்து விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி அமையும் என உறுதி செய்யப்பட்டது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பொது மருத்துவக்கல்லூரிக்கு முன்பே தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் இன்னும் தொடங்கப்படாத நிலை நீடிக்கிறது. எனவே தென் மாவட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும.் இதன் மூலம் விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த கிராமப்புற மாணவர்களும் பயன்பெற வாய்ப்பு ஏற்படும்.
தாமதம் வேண்டாம்
விருதுநகர் சேவை சங்க நிர்வாகி விஜயகுமாரி:-
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண்ணில் மருத்துவ கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறிவிட்ட நிலையில் அதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட பல் மருத்துவக்கல்லூரி இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. பொது மருத்துவக்கல்லூரியுடன் பல் மருத்துவக்கல்லூரியும் வந்தால் தான் முழுமை பெறும் நிலை உள்ளது.
மேலும் தென் மாவட்டங்களில் பல் மருத்துவக்கல்லூரி இல்லாத நிலையில் கல்வியில் சிறந்த விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டால் தென்மாவட்ட கிராமப்புற மாணவர்களும் பல் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்படும். எனவே விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்க மேலும் தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நவீன சிகிச்சை
ஸ்ரீவில்லிபுத்தூர் பிரபல டாக்டரும், இந்திய மருத்துவக்கழகத்தின் முன்னாள் செயலாளருமான டாக்டர் செல்வராஜன் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்திற்கு தமிழக அரசு பல் மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி வழங்கியது. ஆனால் இன்று வரை பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படவில்லை. விருதுநகர் மாவட்டத்தில் பல் மருத்துவக்கல்லூரி இல்லாத நிலை உள்ளது. எனவே அரசு உடனே ஆரம்பிக்க ஆயத்த பணிகளை செய்ய வேண்டும். இதன் மூலம் பல் மருத்துவ சிகிச்சையில் நவீன முறைகளையும், நவீன சிகிச்சைக்கான உபகரணங்களையும் கொண்டு சிகிச்சை பெற ஏதுவாக இருக்கும்.
எனவே விருதுநகரில் அரசு பல் மருத்துவக்கல்லூரியை உடனே ெதாடக்க வேண்டும். இதன் மூலம் வருடத்திற்கு 150 பல் மருத்துவர்கள் அதிகமாக உருவாக்கப்படுவார்கள். பல் மருத்துவ சிகிச்சை நோயாளிகளும் பயன்பெறுவர்.
சொந்த மாவட்டத்தில் படிப்பு
மாணவர் வாசுராஜன்:-
விருதுநகர் மாவட்டத்தில் பல் மருத்துவக்கல்லூரி இல்லை. பல் மருத்துவக்கல்லூரி ஆரம்பிக்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று வரை ஆரம்பிக்கப்படவில்லை. அவ்வாறு ஆரம்பிக்கப்பட்டால் பல் மருத்துவத்தில் உயர்ந்த சிகிச்சை கிடைக்கும். மேலும் பல் மருத்துவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பல் மருத்துவக்கல்லூரி தேர்வு மூலம் தங்களது சொந்த மாவட்டத்தில் படிக்க வாய்ப்புகள் ஏற்படும்.