எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். அங்கு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். அங்கு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் கீழவாசல் பகுதியில், மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையும், விளாத்திகுளத்தில் இருந்து கோவில்பட்டி செல்லும் சாலையில் இணைகின்றன. இந்த இரு சாலைகளிலும் எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்து பரபரப்பாக காணப்படும்.
குறிப்பாக, மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் தூத்துக்குடி துறைமுகத்துக்கு ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும் ராமேசுவரம் போன்ற சுற்றுலா தலங்களுக்கும் அந்த வழியாக ஏராளமானோர் வாகனங்களில் சென்று வருகின்றனர்.
அடிக்கடி ஏற்படும் வாகன விபத்துகள்
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் பகுதியில் மேம்பாலம் இல்லாததால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதில் உயிரிழப்புகளும் நடந்து உள்ளன.
இதனால் அச்சம் அடைந்துள்ள அந்த பகுதி பொதுமக்கள், விபத்துகளை தடுக்க அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் அது இன்னும் நிறைவேறாமலேயே இருக்கிறது. இதுகுறித்து மக்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
மேம்பாலம் அமைக்க வேண்டும்
எட்டயபுரத்தை சேர்ந்த வள்ளிக்கண்ணு :-
நாங்கள் இந்த பகுதியில் 2 தலைமுறையாக வசித்து வருகிறோம். இந்த வழியாக தான் விளாத்திகுளம், வேம்பார், சூரங்குடி, நாகலாபுரம், ராமேசுவரம் போன்ற பகுதிகளுக்கு சென்று வர முடியும். இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படாததால், வாகன ஓட்டிகள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். காவல்துறையின் சார்பில் தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. மேம்பாலம் அமைப்பது உள்ளிட்டவை தொடர்பாக குறுக்குச்சாலை, கீழஈரால், எப்போதும் வென்றான் ஆகிய பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் களஆய்வு நடத்தினர். ஆனால், எட்டயபுரம் பகுதியில் அவ்வாறு ஆய்வு செய்யவில்லை. எனவே, இங்கு விரைவில் மேம்பாலம் அமைத்து உயிரிழப்புகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைரமணி என்பவர் கூறுகையில், 'இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி துறைமுகத்துக்கு ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. அந்த வாகனங்கள் மதுரை -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் வழியாக தான் செல்கின்றன. போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் எட்டயபுரம் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படாததால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நடந்து வருகின்றன. மேலும் வாகன ஓட்டிகளும் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே அங்கு மேம்பாலம் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
ஆட்டுச்சந்தை
இப்பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் கூறும்போது, 'எட்டயபுரத்தில் வாரம்தோறும் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டுச்சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாகனங்களில் ஆடுகளை ஏற்றிக் கொண்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் வந்து கலந்து கொள்கின்றனர். தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வரும் வியாபாரிகள், எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையை கடந்து தான் வருகின்றனர். எனவ, பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும்' என்றார்.
பாண்டி கூறும்போது, 'எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையை கடந்துதான் விளாத்திகுளம், ராமனூத்து, படர்ந்தபுளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்ல வேண்டியது உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த சாலையை கடந்து தான் எட்டயபுரத்துக்கு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் விபத்துகள் அதிகமாக நடக்கின்றன. அங்கு மேம்பாலம் அமைத்தால் விபத்துகள் ஏற்படுவது தடுக்கப்படும்' என்றார்.
இதே பகுதியை சேர்ந்த ஜெயக்கண்ணன் கூறுகையில், 'விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளையக்கூடிய விளைபொருட்களை எட்டயபுரம், கோவில்பட்டி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு வாகனங்கள் மூலம் இந்த வழியாக தான் கொண்டு செல்கின்றனர். அவர்கள் பயன்பெறும் வகையில் இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும்' என்றார்.