அடிக்கடி ஏற்படும் விபத்தை தவிர்க்க கோடங்கிபட்டி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்படுமா?


அடிக்கடி ஏற்படும் விபத்தை தவிர்க்க கோடங்கிபட்டி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்படுமா?
x

அடிக்கடி ஏற்படும் விபத்தை தவிர்க்க கோடங்கிபட்டி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்

ரூ.516 கோடியில் சாலை பணி

திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2008-ம் ஆண்டு சுமார் 82 கிலோமீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணி ரூ.516 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டது. இதில் கரூர் மாவட்டம் மணவாசியில் இருந்து கரூர் வரை உள்ள 22 கிலோ மீட்டர் 4 வழி சாலையாகவும், மற்ற சாலைகள் இருவழி சாலையாகவும் போடப்பட்டு உள்ளன.

இதன் மூலம் திருச்சியில் இருந்து வரும் பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் வீரராக்கியத்தில் இருந்து பிரிந்து புலியூர், காந்திகிராமம் வழியாக கரூர் நகருக்குள் செல்வதற்கும், பிற கனரக வாகனங்கள் மற்றும் திண்டுக்கல், ஈரோடு, கோவை, சேலம், மதுரை, உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் லாரிகள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை வீரராக்கியத்தில் இருந்து நேரடியாக சுக்காலியூர் பைபாஸ் சென்றடையும் வகையில் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

அடிக்கடி விபத்து

இவ்வாறு செல்லும் வாகனங்கள் சுக்காலியூரில் உள்ள மதுரை- சேலம் ேதசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் அங்கு இருந்து பிற மாவட்டங்களுக்கு வாகனங்கள் பிரிந்து செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் கனரக வாகனங்கள், லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் கரூர் டவுனுக்குள் வராமல் நேரடியாக பைபாஸ் சாலையை சென்றடையும் வகையில் உள்ளது. இதனால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் திருச்சியில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் டவுனுக்குள் வராமல் நேரடியாக சுக்காலியூர் ேதசிய நெடுஞ்சாலையில் சென்று அங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு பிரிந்து செல்லும் வகையில் உள்ளது.

கோரிக்கை

இதேபோல் கோடங்கிபட்டி- ராயனூர் இணைப்பு சாலை வழியாக பல்வேறு கிராமங்களில் இருந்து கரூர் நகருக்குள் வரும் இருசக்கர வாகனங்கள், கார்கள், பாதசாரிகள் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் இணைப்பு சாலை தெரியாமல் அந்த வழியாக தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் வேகமாக வருவதாலும் விபத்து ஏற்பட்டு அடிக்கடி உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இதனால் கோடங்கிபட்டி பகுதியில் கரூர்-திருச்சி சாலையில் மேம்பாலம் அமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடந்த பல ஆண்டுகளாக எதிர்பார்த்து உள்ளனர்.

100-க்கும் மேற்பட்ட வாகனங்கள்

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்விரம் வருமாறு:-

சின்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பட்டதாரி சேதுராமன்:-

நொச்சிப்பட்டி, தம்மாநாயக்கன்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, ஈசநத்தம், மூக்கணாங்குறிச்சி, ஆர்.வெல்லோடு உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து கரூர் நகருக்குள் செல்லும் பொதுமக்கள் கோடங்கிபட்டி பகுதியில் உள்ள கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்து கரூர் நகருக்குள் செல்ல வேண்டியது உள்ளது.

இந்த நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் பயணம் செய்வதால் விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மேம்பாலம் அமைக்க வேண்டும்.

குழந்தைகள் சாலையை கடக்க முடியவில்லை

சின்னநாயக்கன் பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கனகராஜ்:-

தேசிய சாலையை கடக்க முயன்று இதற்கு முன்பாக பலர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இப்பகுதியில் 2 கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன இதில் படிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவ-மாணவிகள் வந்து செல்கின்றனர்.

இவ்வாறு வரும் மாணவ-மாணவிகள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் குழந்தைகளை தனியாக பள்ளிக்கு அனுப்புவதில் மக்களிடையே ஒருவகை அச்சம் உள்ளது. குழந்தைகள் தனியாக சாலையை கடக்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே விரைவில் பாலம் கட்ட வேண்டும்.

சிக்னல்கள் அமைக்க வேண்டும்

பெருமாள்பட்டியை சேர்ந்த நாகராஜ்:-

கோடங்கிபட்டி ேதசிய ெநடுஞ்சாலையில் 2 பக்கங்களிலும் சிக்னல்கள் அமைக்கப்பட வேண்டும். ஏனெனில் வெகு தொலைவில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு இடையில் கிராம சாலை குறுக்கிடுவதை அறிந்து கொள்ள முடியவில்லை. எனவே மின்சாரத்தில் இயங்கும் சிக்னல்கள் அமைக்கப்படும்போது, வாகன ஓட்டிகள் சற்று வேகத்தை குறைத்து வருவதற்கு வாய்ப்பு உண்டு. மேலும் 2 சாலைகளுக்கு இடையே உள்ள மண் சாலை சற்று பள்ளமாக உள்ளதால், மழைக்காலங்களில் அதில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. எனவே இரு சாலைகளுக்கு இடையே உள்ள மண்சாலையை தார்சாலையாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story