ஓகைப்பேரையூரில் புதிய பாலம் கட்டித்தரப்படுமா?


ஓகைப்பேரையூரில் புதிய பாலம் கட்டித்தரப்படுமா?
x

ஓகைப்பேரையூரில் புதிய பாலம் கட்டித்தரப்படுமா?

திருவாரூர்

கூத்தாநல்லூர்,

ஆபத்தான பாலத்தை இடித்துவிட்டு ஓகைப்பேரையூரில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழமையான பாலம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓகைப்பேரையூரில் நடுபனையனார் ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் உள்ளது. மிகவும் பழமையான இந்த பாலத்தை ஓகைப்பேரையூர், ராமானுஜமணலி, நாகராஜன்கோட்டகம், கலிமங்கலம், வடபாதி, மூலங்குடி, சித்தனங்குடி, கல்லடி மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் லாரி, டிராக்டர், கார், வேன், ஆட்டோ, பள்ளி வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் இந்த பாலத்தில் சென்று வருகின்றன.

புதிய பாலம் கட்டித்தர வேண்டும்

தற்போது இந்த பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் பாலத்தின் ஒரு பக்கம் உள்ள தடுப்பு சுவர் முற்றிலும் இடிந்து ஆற்றில் விழுந்துள்ளது. பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டு எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் உள்ளனர். எனவே சேதமடைந்த பாலத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story