பூம்புகார் தபால் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?
இடம் ஒதுக்கீடு செய்து 25 ஆண்டுகள் ஆவதால் பூம்புகார் தபால் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
திருவெண்காடு:
இடம் ஒதுக்கீடு செய்து 25 ஆண்டுகள் ஆவதால் பூம்புகார் தபால் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தபால் நிலையம்
பூம்புகார்(காவிரி பூம்பட்டினம்) பகுதியில் தபால் நிலையம் இயங்கி வருகிறது. இந்த தபால் நிலையத்தின் கீழ் வானகிரி, பூம்புகார் பீச், மேலையூர், நெய்த வாசல் என 4 கிளை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில் 12 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தபகுதியில் வசிக்கும் 25,000 பேர் தபால் சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்று வருகின்றனர். தனியார் கொரியர் நிறுவனங்கள் பெருகினாலும், கிராம மக்கள் தபால் நிலையத்தின் சேவையை தான் முழுமையாக நம்பி உள்ளனர். இந்த அஞ்சலகத்திற்குட்பட்ட பூம்புகார் சுற்றுலா தலம், நவகிரக கோவிலான கேது கோவில், கல்லூரி, மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பயன்பெற்று வருகின்றன.
குப்பை மேடாக காணப்படுகிறது
தபால் சேவையை, இந்த பகுதி மக்கள் நிரந்தரமாக பெற வேண்டும் என்ற நோக்கில் 25 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி பூம்பட்டினம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பூம்புகார் சாலையில் நிரந்தர கட்டிடம் கட்ட ஏதுவாக இடத்தை ஒதுக்கி தந்தது. உடனடியாக தபால் துறை சார்பில் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தை பராமரிக்கப்படாதாலும், நிரந்தர கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படாதாலும் தற்போது அந்த இடம் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. எனவே இந்த இடத்தில் தபால் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
புதிய கட்டிடம் கட்ட வேண்டும்
இதுகுறித்து காவிரி பூம்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் கூறுகையில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நிரந்தர கட்டிடம் கட்ட தபால் துறைக்கு நிலம் ஒதுக்கீடு செய்து 25 ஆண்டுகள் ஆகியும் இதுவரை நிரந்தர கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்காமல் உள்ளது வேதனை அளிக்கிறது. தற்போது தபால் நிலையமை் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தபால் நிலையம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடம் குப்பை ேமடாக காட்சி அளிக்கிறது. எனவே இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தபால் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.