ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே, பழையகாக்கையாடியில் ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே, பழையகாக்கையாடியில் ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
தடுப்பணை
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள, தண்ணீர்குன்னத்தில், அப்பகுதி விவசாயிகளின் பயன்பாட்டுக்கு பழையகாக்கையாடி என்ற இடத்தில், 40ஆண்டுகளுக்கு முன்பு, அதிவீரராமன் ஆற்றின் குறுக்கே, தண்ணீரை போதிய அளவு தேக்கி வைக்க வசதியாக தடுப்பணை கட்டப்பட்டது.
அங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீரை பாசன வாய்க்கால் மூலமாக கொண்டு சென்று பழையகாக்கையாடி, பெரியகுருவாடி, பள்ளிவர்த்தி பூதமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள் நெல், உளுந்து பயறு, பருத்தி போன்ற பயிர்களை, சுமார் 500 ஏக்கரில் சாகுபடி செய்து வருகின்றனர்.
விவசாயிகள் அவதி
இந்த நிலையில், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை பழுதடைந்து இடிந்து விழுந்து விட்டது. இதனால் ஆற்றில் வரும் தண்ணீர் தேங்கி நிற்காமல் சென்று விடுகிறது. பாசன வாய்க்கால் மூலமாக தண்ணீர் போதிய அளவில் வயல்களுக்கு செல்லவில்லை. இதனால், சாகுபடி செய்வதற்கு போதிய அளவில் தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே பழுதடைந்த தடுப்பணையை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிய தடுப்பணை கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய தடுப்பணை
இது குறித்து பெரியகுருவாடியைச் சேர்ந்த விவசாயி மாணிக்கம் கூறுகையில் "பழையகாக்கையாடியில், அதிவீரராமன் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையில் போதிய அளவு தண்ணீரை தேக்கி வைத்ததால், பாசன வாய்க்கால் மூலம் தண்ணீரை சிரமமின்றி வயல்களுக்கு கொண்டு சென்று சாகுபடி பணிகளை செய்து வந்தோம். தற்போது தடுப்பணை இடிந்ததால் ஆற்றில் குறிப்பிட்ட இடத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதில்லை.
இதனால், கடந்த 10 ஆண்டுகளாக முறையாக பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல முடியாமல் சிரமத்தில் உள்ளோம்.
இது குறித்து பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை பழையகாக்கையாடியில் தடுப்பணை கட்டப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து பழையகாக்கையாடியில் புதிய தடுப்பணை கட்டித்தர வேண்டும் .
சிரமங்கள்
பள்ளிவர்த்தி பூதமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜன்:-
தடுப்பணை பழுதடைந்து இடிந்து விழுந்ததால் கடந்த 10 ஆண்டுகளாக தண்ணீர் தேங்கி நிற்காமல் சென்று விடுகிறது. இதனால், பாசன வாய்க்காலில் தண்ணீர் போதிய அளவுக்கு செல்லாததால், ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் கூட வயல்களில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகும் நிலை ஏற்படுகிறது. பயிர்களை காப்பாற்ற பம்புசெட் மூலம் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலை உள்ளது. தடுப்பணை பழுதடைந்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம்.
எனவே பழையகாக்கையாடியில் ஷட்டருடன் கூடிய தடுப்பணை கட்டித் தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.