புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படுமா?


புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படுமா?
x
தினத்தந்தி 16 Oct 2023 6:45 PM GMT (Updated: 16 Oct 2023 6:47 PM GMT)

கூத்தாநல்லூர் அருகே புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

கூத்தாநல்லூர் அருகே உள்ள குலமாணிக்கத்தில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதன் மூலம் குலமாணிக்கம் கிராமத்தில் உள்ள தெருக்களுக்கு குடிநீர் வினியோகம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

குறிப்பாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை தாங்கி பிடித்து கொண்டிருக்கும் தூண்களில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரியும் அளவிற்கு சேதமடைந்து காணப்படுகிறது.

சேதமடைந்து உள்ளது

மேலும் கட்டிடத்தின் மேல் பகுதியிலும் விரிசல்கள் ஏற்பட்டு காணப்படுகிறது. இதனால் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டிடம் அதன் பலம் இழந்து விட்டதாக அப்பகுதி மக்கள் கருதுகின்றனர். இந்த கட்டிடம் உள்ள இடத்தையொட்டி அரசு பள்ளி மற்றும் கோவில் உள்ளதால் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் கிராம மக்கள் கூடும் இடமாக உள்ளது. இதனால் எதிர்பாராத விதமாக சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சரிந்து விழுந்து ஏதேனும் விபரீதம் ஏற்பட்டு விடுமோ என்று கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

புதிதாக கட்ட கோரிக்கை

எனவே சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைப்பு செய்து தர வேண்டும். அல்லது அதனை இடித்து அகற்றி விட்டு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story