வெள்ளையாற்றின் கரையில் புதிதாக படித்துறை கட்டப்படுமா?


வெள்ளையாற்றின் கரையில் புதிதாக படித்துறை கட்டப்படுமா?
x
தினத்தந்தி 21 Sep 2023 6:45 PM GMT (Updated: 21 Sep 2023 6:45 PM GMT)

கூத்தாநல்லூர் அருகே வெள்ளையாற்றின் கரையில் புதிதாக படித்துறை கட்டப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே வெள்ளையாற்றின் கரையில் புதிதாக படித்துறை கட்டப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

சேதமடைந்த படித்துறை

கூத்தாநல்லூர் அருகே உள்ள கீழபனங்காட்டாங்குடி அருகில் உள்ளது மங்களாபுரம் கிராமம். இந்த கிராம மக்களின் பயன்பாட்டிற்காக வெள்ளையாற்றின் கரையோரத்தில் படித்துரை கட்டப்பட்டது. இந்த படித்துரையை கீழபனங்காட்டாங்குடி, மங்களாபுரம், மாளிகைத்திடல், வேளுக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படித்துரையில் உள்ள படிக்கட்டுகள் சேதமடைந்தது. அதில் இருந்த படிக்கட்டுகளில் சில இடிந்து ஆற்றுக்குள் விழுந்து விட்டது. இதனால் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்து ஒரிரு படிக்கட்டுகள் மட்டுமே, அங்கும் இங்குமாய் கரையோடு கரையாக ஒட்டிக்கொண்டுள்ளது.

புதிதாக கட்டித்தர வேண்டும்

மேலும் தற்போது அங்கு படித்துரை இருந்த இடமே தெரியாத நிலையில் உள்ளது. என்ற போதிலும், சேதமடைந்த அந்த படிக்கட்டுகளில் தட்டுத்தடுமாறி இறங்கி அப்பகுதி மக்கள் குளித்து வருகின்றனர். இந்த சேதமடைந்த படிக்கட்டுகளில் இறங்கும் போது சிலர் விழுந்து காயம் அடைகின்றனர்.

ஆனாலும் வேறு வழியில்லாமல், சேதமடைந்த படிக்கட்டுகளையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சிரமமாக உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெள்ளையாற்றின் கரையில் சேதமடைந்த படிக்கட்டுகளை அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிதாக படித்துரை கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story