ஆலமரத்து மேடு பகுதியில் பயணிகள் நிழற்குடை கட்டி தரப்படுமா?


ஆலமரத்து மேடு பகுதியில் பயணிகள் நிழற்குடை கட்டி தரப்படுமா?
x

ஆலமரத்து மேடு பகுதியில் பயணிகள் நிழற்குடை கட்டி தரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்

தினமும் செல்லும் பஸ்கள்

கரூர் மாவட்டம், திருக்காடுதுறை ஊராட்சி கரைப்பாளையம் அருகே ஆலமரத்துமேடு கிராமம் உள்ளது. இந்த ஆலமரத்துமேடு பகுதி வழியாக பரமத்தி வேலூர்- கொடுமுடி செல்லும் நெடுஞ்சாலையின் தார் சாலை செல்கிறது. இந்த தார் சாலையின் வழியாக கோவை, ஈரோடு, வெள்ளகோவில், கொடுமுடி, அரவக்குறிச்சி, பழனி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், அதே போல் பரமத்தி வேலூர், நாமக்கல், திருச்செங்கோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் தினமும் சென்று வருகின்றன.

இந்நிலையில் ஆலமரத்து மேடு பகுதியில் அரசு ஆரம்ப பள்ளி, தீயணைப்பு நிலையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, பல்வேறு எண்ணெய்கள் தயாரிக்கும்மில், பல்வேறு தானியங்களின் மாவு அரைக்கும் மில் ஆகியவை செயல்படுகிறது. அதே போல் அருகாமையில் சிமெண்ட்டு ஆலை, காகித ஆலை உள்ளிட்ட ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

பயன்படுத்த முடியாத நிலை

கரைப்பாளையம், ஆலமரத்து மேடு, பூலான் காடு, திருக்காடுதுறை, நத்தமேடு பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்வதற்கு இந்த ஆலமரத்து மேடு பகுதிக்கு வந்து பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.

வெளியூர்களுக்கு பேருந்துகளுக்கு சென்று வரும் பயணிகள் இந்த தார் சாலை ஓரத்தில் உள்ள கல்லுக்கட்டில் அமர்ந்து செல்கின்றனர். மழை காலங்களிலும், வெயில் காலங்களிலும் அந்த கல்க்கட்டை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் ஆலமரத்தில் சுற்றி கற்களை வைத்து கட்டி மேடை அமைத்து அமரும் வகையில் உள்ளது.

கோரிக்கை

இந்த கல்லு கட்டு கட்டி பல ஆண்டுகள் ஆகிறது.மேலும் வயதானதாக ஆலமரம் உள்ளது. பலமான காற்று அடித்தால் இந்த ஆலமரம் கீழே விழும் சூழ்நிலையில் உள்ளது. இதனால் அதில் அமர்ந்திருக்கும் பொது மக்களுக்கு ஆபத்தான சூழ்நிலை உள்ளது. வெயில் காலங்களிலும், மழை காலங்களிலும் இதனால் நிழல் பகுதிக்கு சென்று நின்று கொண்டே இருந்து அந்த வழியாக வரும் பேருந்துகளில் ஏறி செல்கின்றனர். பஸ்களுக்கு செல்லும் பயணிகள் அமர்ந்து செல்லும் வகையில் மழை காலங்களிலும் வெயில் காலங்களிலும் பொதுமக்கள் பாதிக்காத படி ஆலமரத்து மேடு பகுதியில் பொதுமக்களின் நலன் கருதி புதிதாக நிழற்குடை அமைத்து தரவேண்டும் என அந்த சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

50 ஆண்டுகள் காத்திருப்பு

விவசாயி கிட்டு:-நான் குடும்பத்துடன் பல ஆண்டுகளாக இங்கு குடியிருந்து வருகிறேன். நாங்கள் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று வருவோம். எங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் வெளியூர்களுக்கு பஸ்சில் சென்று வருவார்கள். ஆனால் அந்த காலம் முதல் இங்கு கட்டியிருக்கும் கல் கட்டில் அமர்ந்துதான் பஸ்களுக்கு சென்று வருகிறோம். தொடர்ந்து மழை பெய்தால் நாங்கள் பஸ்களில் ஏறி ஊருக்கு செல்ல முடியாது.

வெயில் காலங்களிலும் இங்கு அமர்ந்து செல்ல முடியாது. நாங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பகுதியில் நிழற்குடை அமைத்து தருமாறு பல்வேறு அதிகாரியிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தமிழக அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இங்கு பயணிகள் அமர்ந்து செல்லும் வகையில் நிழற்குடை அமைத்து தர வேண்டும்.

மழை பெய்தால் சிரமம்

முருகையன்:-நாங்கள் இங்கு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக டீக்கடை வைத்து நடத்தி வருகிறோம். எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெளியூர் செல்வது என்றால் இந்த வழியாக செல்லும் பேருந்தில் ஏறி வெளியூர்களுக்கு சென்று வருகிறோம். இந்நிலையில் இந்த பகுதியில் நிழற்குடை இல்லாததால் மழை காலங்களிலும், வெயில் காலங்களிலும் பயணிகள் பாதிக்கப்பட்டு பேருந்தில் ஏறி செல்கின்றனர்.தொடர்ந்து மழை பெய்தால் நனைந்து கொண்டே பேருந்துகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் புதிதாகநிழற்குடை கட்டி பேருந்துகளுக்கு செல்லும் பயணிகள் நனையாதபடியும் வெயில் தாக்காத படி நிழற்குடை அமைத்து தர வேண்டும்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

மொட்டையப்பன்:- நாங்கள் ஆலமரத்து மேடு பகுதியில் பொதுமக்களின் நலன் கருதி நிழற்குடை அமைத்துத் தருமாறு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் இதுவரை இந்த பகுதியில் நிழற்குடைத் அமைக்கப்பட வில்லை. இதனால் வெளியூர்களுக்கு செல்லும் அனைவரும் வெயிலிலும், மழையிலும் பாதிக்கப்பட்டு பஸ்சில் ஏறி செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

உள்ளாட்சித் துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்காமல் இருக்கின்றனர். இதனால் பஸ்களுக்கு செல்லும் பயணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிப்பு இல்லை

மல்லிகா:- தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த பகுதியில் சேதமடைந்த தார் சாலையை சீரமைக்கின்றனர். அதேபோல் தற்பொழுது நொய்யல் குறுக்கு சாலை முதல் கந்தம்பாளையம் வரை தார் சாலை விரிவாக்க பணியும், சேதமடைந்த தார் சாலையை சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலை அமைக்கும் போது ஒவ்வொரு ஊரிலும் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அமர்ந்து செல்லும் வகையில் அமைத்து தர வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் நிழற்குடை கட்டிக் கொடுத்திருக்க வேண்டும்.ஆனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் எதையும் கண்டு கொள்ளாமல் சாலை பராமரிக்கும் பணி மட்டும் நடந்தால் போதும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள்.தற்போது நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் சாலைகள் அமைக்கும் போது ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் இருபுறமும் நிழற்குைட கட்டப்பட்டுள்ளது. அதேபோல் நொய்யல் குறுக்கு சாலை முதல் கந்தம்பாளையம் வரை அனைத்து ஊர்களிலும் உள்ள பஸ் நிறுத்தத்தில் புதிதாக நிழற்குடை அமைத்துக் கொடுக்க வேண்டும். அவ்வாறு நிழற்குடை அமைத்துக் கொடுக்கும் போது பஸ்களுக்கு செல்லும் பயணிகள் நிழல்கூடத்தில் அமர்ந்து பஸ்கள் வரும்போது பேருந்தில் ஏறிச் செல்வார்கள். மழைக்காலங்களிலும், வெயில் காலங்களிலும் அந்த நிழற்குடையில் அமர்ந்து செல்வார்கள். இதனால் பயணிகள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story