பரமத்தியில் சுற்று வட்டச்சாலை அமைக்கப்படுமா?
பரமத்தியில் விபத்துகளை தடுக்க சுற்றுவட்டச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பரமத்திவேலூர்
தேசிய நெடுஞ்சாலை
வாரணாசியில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை கடந்து செல்கிறது. தமிழகத்தில் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடிக்கு அதிக அளவிலான பாரம் ஏற்றிய ஏராளமான கனரக வாகனங்கள் இந்த வழியாக செல்வது வழக்கம்.
மேலும் பரமத்தி வழியாக தொழிற்சாலைகளுக்கு செல்லும் வாகனங்கள், பள்ளி வாகனங்கள் மற்றும் இங்குள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு வந்து செல்லும் வாகனங்களாலும், திருச்செங்கோடு வழியாக சங்ககிரி செல்லும் வாகனங்கள் மூலமும் பரமத்தியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பரமத்தி வழியில் மாற்றுப்பாதை இல்லாததால் பரமத்தி நகர பகுதிக்குள் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சுற்றுவட்டச்சாலை
கனரக வாகனங்கள் செல்லும்போது அடிக்கடி விபத்துகளும், உயிர்சேதங்களும், பொருட்சேதங்களும் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பரமத்திக்குள் கனரக வாகனங்கள் செல்லாமல் வேலூர் அருகில் இருந்து பரமத்தி அருகே திருச்செங்கோடு சாலையை இணைக்கும் வகையில் மாற்றுப்பாதை, அதாவது சுற்றுவட்டச்சாலை அமைப்பதன் மூலம் பரமத்தி நகருக்குள் ஏற்படும் தொடர் விபத்துகளையும், உயிர்சேதங்களையும், பொருட்சேதங்களையும் தவிர்க்க ஏதுவாக இருக்கும்.
இது குறித்து பரமத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழ்நிலையே உள்ளது. எனவே பரமத்திக்குள் கனரக வாகனங்கள் செல்லாமல் மாற்றுப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
உயிர் சேதங்கள்
இது குறித்து வக்கீல் காந்தி கூறியதாவது;-
பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலை நீண்ட பழமையான சாலையாகும். பரமத்தி அருகே கரூர் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் ஏராளமான கனரக வாகனங்கள் செல்லாமல் பரமத்தி வழியாக திருச்செங்கோடு மற்றும் சங்ககிரிக்கு செல்கிறது.
இதனால் பரமத்தியில் உள்ள திருச்செங்கோடு சாலையில் அடிக்கடி விபத்துகளும், உயிர்சேதங்களும் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க பரமத்திக்குள் கனரக வாகனங்கள் வராமல் தடுக்க மாற்றுப்பாதை (ரிங் ரோடு) அமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாற்றுச்சாலை
பரமத்தி நல அறக்கட்டளை நாமக்கல் மாவட்ட ஆலோசகர் ராஜாமுகமது கூறியதாவது:-
பரமத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலையில் திருச்செங்கோடு, நாமக்கல் மற்றும் வேலூர் மார்க்கத்திற்கு வரும் கனரக வாகனங்களால் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுவதால் தற்போது வரை பல தனியார் பஸ்கள் பரமத்திக்குள் வராமல் நாமக்கல்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று வருகிறது. மேலும் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அடிக்கடி நிகழ்கிறது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் பரமத்தி போலீஸ் நிலையங்களில் பலமுறை புகார்கள் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு நிரந்தர தீர்வாக பரமத்தி நகரை சுற்றியும் ரிங் ரோடு அமைக்க வேண்டும். கரூர்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறவாபாளையம் அருகே வெள்ளாளபாளையம் சாலையில் இருந்து சின்னகுளம், கரட்டுப்பாளையம் வழியாக மாவுரெட்டி அருகே திருச்செங்கோடு சாலை இணைக்கும் வகையிலும், திருச்செங்கோட்டில் இருந்து வரும் கனரக வாகனங்கள் பரமத்தி அருகே திருமணிமுத்தாறு ஆற்றை கடந்து வில்லிபாளையம் சாலை வழியாக உப்புப்பட்டி வழியாக நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச் சாலையை சென்றடையும் வகையில் மாற்று சாலையை அமைத்து தர வேண்டும்.
போக்குவரத்து நெரிசல்
பரமத்தியை சேர்ந்த திருமலை செல்வன் கூறியதாவது;-
பரமத்தி வழியாக திருச்செங்கோடு செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் திருச்செங்கோட்டிற்கும், திருச்செங்கோட்டில் இருந்து பரமத்திவேலூர் வரும் வாகனங்கள் பரமத்திக்குள்ளும் செல்லும்போது வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
எனவே போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுமக்கள் நலன் கருதி மாற்றுச்சாலை (ரிங் ரோடு) அமைக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.