பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நிறுத்த தனி அறை-கிடங்கு அமைக்கப்படுமா?


பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நிறுத்த தனி அறை-கிடங்கு அமைக்கப்படுமா?
x

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நிறுத்த தனி அறை-கிடங்கு அமைக்கப்படுமா?

திருவாரூர்

போலீஸ் நிலையங்களில் துருப்பிடித்து வீணாக போகும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நிறுத்த தனி அறை அல்லது கிடங்கு அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள்- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விஷப்பூச்சிகளின் கூடாரம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள், கோர்ட்டு வளாகங்கள் உள்ளிட்ட இடங்கள் மற்றும் ஏதேனும் ஒரு பகுதியில் பழைய வாகனங்கள் குவியல் குவியலாக நிறுத்தப்பட்டிருக்கும். அந்த வாகனங்கள் புழுதி படிந்து, துருப்பிடித்து இனி எதற்கும் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும். சில வாகனங்களில் செடி, கொடிகள் வளர்ந்து நிற்பதுடன் விஷப்பூச்சிகளின் கூடாரமாகவும் காணப்படும்.

இவ்வாறு காணப்படும் வாகனங்கள் அனைத்தும் விபத்து மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள், கேட்பாரற்று கிடக்கும் வாகனங்கள், மதுபோதையில் இருக்கும் நபர்களால் ஓட்டிச் செல்லப்படும் வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டவை ஆகும்.

ஏலம் விடப்படும்

இதில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு முடிந்தவுடன் கோர்ட்டு அனுமதியுடன் ஏலம் விடப்படுகிறது. யாரும் உரிமை கோராத வாகனங்களும் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு ஏலம் விடப்படுகிறது.

வழக்குகள் கோா்ட்டு கட்டுப்பாட்டுக்குள் வருவதால், விசாரணை முடிந்த பின்னரே உரியவர்களிடம் வாகனங்கள் ஒப்படைக்கப்படும். வழக்குகள் கோா்ட்டில் நீண்ட நாட்கள் நடப்பதால் வாகனங்களும் பல மாதங்கள் தாண்டியும் போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்படுகிறது.

இந்த வாகனங்கள் மேற்கூரை இல்லாத வெட்ட வெளியில் நிறுத்தப்படுவதால், வெயில், மழைக்காலங்களில் பழுதடைந்து சில வாரங்களில் துருப்பிடிக்கின்றன.

தனி அறை-கிடங்கு அமைத்து தர வேண்டும்

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஏராளமான வாகனங்கள் உள்ளன. எனவே குற்ற வழக்குகள் விரைவாக முடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்படும் பல லட்சம் மதிப்புடைய கார், ஆட்டோ, மோட்டார்சைக்கிள்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களையும் உரியவர்களிடம் விரைந்து ஒப்படைக்கப்பட வேண்டும். அவ்வாறு வழக்கு முடியும் வரை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்களை சரியான பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும். இல்ைலயெனில் அதற்கு என்று தனியான ஒரு கட்டிடம் ஏற்படுத்தி அவற்றில் நிறுத்தி வைக்க வேண்டும். வாகனங்களை நிறுத்த தனி அறை அல்லது கிடங்கு அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்கூரையுடன் காப்பகம்

இதுகுறித்து மன்னார்குடியை சேர்ந்த துரைஅருள்ராஜன் கூறியதாவது:-

வாகன சோதனையின் போது, மது அருந்தி வாகனம் ஓட்டுவோரின் வாகனங்கள், போதிய ஆவணங்கள் இல்லாமலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்லும் வாகனங்களும், விபத்தில் சிக்கி சேதமடைந்த வாகனங்கள், கடத்தல் தொழிலுக்கு பயன்படுத்தும் வாகனங்கள் என பல்வேறு சம்பவங்களில் தொடர்புடைய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு எடுத்து செல்கின்றனர். பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு கோர்ட்டு பாதுகாப்பில் நிறுத்தப்படவேண்டிய வாகனங்கள் போலீஸ்நிலையங்களில் துருபிடித்து வீணாகிறது.

சில வாகனங்கள் ஆவணங்கள் இல்லாமலும், திருட்டு வாகனங்கள் பல வருடக்கணக்கில் போலீஸ் நிலையத்திலேயே கிடப்பில் போடப்பட்டு, உரிய பராமரிப்பு இல்லாமல் மழை, பனி, வெயில் போன்றவைகளால் வாகனம் பழுதடைந்து, பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறது. வாகனங்களை உரிய நேரத்தில் ஏலம் விடவேண்டும். அதுவரை அதனை பாதுகாக்க மேற்கூரையுடன் கூடிய காப்பகம் அமைக்கவேண்டும் என்றார்.


Related Tags :
Next Story