சிறிய ரக தீயணைப்பு வாகனம் வழங்கப்படுமா?


சிறிய ரக தீயணைப்பு வாகனம் வழங்கப்படுமா?
x
தினத்தந்தி 9 Sep 2023 8:15 PM GMT (Updated: 9 Sep 2023 8:15 PM GMT)

குறுகலான சாலைகளில் இயக்கும் வகையில் சிறிய ரக தீயணைப்பு வாகனம் வழங்கப்படுமா? என்று வால்பாறை மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

குறுகலான சாலைகளில் இயக்கும் வகையில் சிறிய ரக தீயணைப்பு வாகனம் வழங்கப்படுமா? என்று வால்பாறை மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

குறுகிய சாலைகள்

மலைப்பிரதேசமான வால்பாறையில் நகர் பகுதி தவிர்த்து எஸ்டேட் பகுதி அதிகளவில் உள்ளது. இங்குள்ள சாலைகள் மிகவும் குறுகலானவை. இந்த சாலைகளில் கனரக தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாது. இதனால் அவசர காலங்களில் மீட்பு பணியில் ஈடுபடுவதில் சிக்கல் நிலவி வருகிறது. இந்த நிலையில் வால்பாறையில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்துக்கு, சமவெளி பகுதியில் பயன்படுத்துவது போன்ற கனரக தீயணைப்பு வாகனம் புதிதாக வழங்கப்பட்டு உள்ளது. இதனால் சிறிய ரக தீயணைப்பு வாகனம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சிறிய ரக வாகனம்

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, வால்பாறையில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்படும். அந்த சமயத்தில், எஸ்டேட் பகுதிகளுக்குள் கனரக தீயணைப்பு வாகனம் சென்று, மீட்பு பணியில் ஈடுபட முடிவது இல்லை. இதனால் அதிகளவில் பொருட் சேதம் ஏற்படுகிறது. இந்த சூழலில், மீண்டும் கனரக தீயணைப்பு வாகனம்தான் வழங்கப்பட்டு உள்ளது. எனவே குறுகலான சாலைகளில் செல்லும் வகையில் சிறிய ரக தீயணைப்பு வாகனத்தை வால்பாறைக்கு வழங்க வேண்டும் என்றனர். தீயணைப்பு துறையினர் கூறுகையில், வால்பாறையில் குறுகலான சாலைகள் உள்ளதால், கனரக தீயணைப்பு வாகனத்தில் மீட்பு பணிக்கு சென்று வருவதில் சிக்கல் உள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளோம். விரைவில் கனரக தீயணைப்பு வாகனத்தை மாற்றி சிறிய ரக தீயணைப்பு வாகனத்தை பெறுவோம் என்றனர்.


Next Story