காக்கும் கரங்களுக்கு சுற்றுச்சுவர் கட்டிக்கொடுக்கப்படுமா...


காக்கும் கரங்களுக்கு சுற்றுச்சுவர் கட்டிக்கொடுக்கப்படுமா...
x
தினத்தந்தி 31 Aug 2023 4:45 AM IST (Updated: 31 Aug 2023 4:45 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவில் போலீஸ் குடியிருப்பு புதர்மண்டி கிடப்பதால் அதனை அகற்றி சுற்றுச்சுவர் அமைத்துதர வேண்டும் என்று போலீசாரின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோயம்புத்தூர்


கிணத்துக்கடவு


கிணத்துக்கடவில் போலீஸ் குடியிருப்பு புதர்மண்டி கிடப்பதால் அதனை அகற்றி சுற்றுச்சுவர் அமைத்துதர வேண்டும் என்று போலீசாரின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பாம்புகள் நடமாட்டம்


கிணத்துக்கடவில் போலீஸ் நிலையத்திற்கு சொந்தமான 3.52 ஏக்கர் நிலம் கிணத்துக்கடவு சார்பதிவாளர் அலுவலகம் அருகில் உள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதியில் போலீஸ் நிலையம் உள்ளது. அதன் பின் பகுதியில் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் குடியிருப்புகள், போலீசார் குடியிருக்க வசதியாக 24 குடியிருப்புகள் உள்ளன. இங்கு போலீசார் தங்களது குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர்.


இந்த நிலையில் குடியிருப்பு வாளகத்தை முறையாக பராமரிக்காததால், அந்த பகுதி முழுவதும் புதர்மண்டி காட்சி அளிக்கிறது. இதனால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் சுற்றுச்சுவர் இல்லாததால் வெளியாட்கள் நடமாட்டமும் உள்ளது. இதன் காரணமாக அந்த குடியிருப்பில் வசிக்கும் போலீசாரின் குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. இரவு நேரங்களில் அச்சத்துடனே நடமாடவேண்டிய நிலை இருந்து வருகிறது.


துர்நாற்றம்


இதுமட்டுமின்றி போலீசாருக்கு சொந்தமான இடத்தை சிலர் குப்பை கொட்டும் இடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது.


எனவே போலீசாரின் குடியிருப்புக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என்று போலீசாரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இதுகுறித்து போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் போலீசாரின் குடும்பத்தார் கூறியதாவது:-


சுற்றுச்சுவர் வேண்டும்


கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தின் பின் பகுதியில் அமைந்துள்ள எங்களது குடியிருப்பு பகுதிக்கு முன்பு அதிக அளவில் முட்புதர்கள் சூழ்ந்து கிடக்கின்றன. இதில் அதிக அளவில் பாம்புகள் நடமாட்டம் உள்ளதால் எங்களது குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே விளையாட அனுப்புவதற்கு கூட அச்சமாக உள்ளது. இதுதவிர குடியிருப்பு பகுதிக்கு முன்பு உள்ள போலீசுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். எனவே இந்த இடத்தை உயர் அதிகாரிகள் பார்வையிட்டு ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடியிருப்பு பகுதியில் உள்ள முட்புதர்களை அகற்றி வெளிநபர்கள் உள்ளே நுழையாத வகையில் சுற்றுச்சுவர் அமைத்துத்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.



Next Story