கூடுதல் அபராதம் விபத்துகளை தடுக்குமா?


கூடுதல் அபராதம் விபத்துகளை தடுக்குமா?
x

அபராத தொகை கூடுதலாக விதிப்பதால் விபத்து குறையுமா என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

அபராத தொகை கூடுதலாக விதிப்பதால் விபத்து குறையுமா என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அபராத தொகை

நாட்டில் பெருகிவரும் வாகன போக்குவரத்துக்கு ஏற்ப சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டி செல்வது விபத்துகளுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பது போன்று அமைகிறது. சாலை விபத்துகளால் விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பறிபோகிறது. உடல் உறுப்புகளை இழப்பவர் பரிதவிக்கும் நிலையும் ஏற்படுகிறது.

இந்தநிலையில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அபராத தொகையை பலமடங்கு அதிகரித்து மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் கே.பணீந்திரரெட்டி பிறப்பித்துள்ளார்.

விபத்தில் தமிழ்நாடு முதலிடம்

தற்போது மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகை 10 மடங்கு அதிகரித்து ரூபாய் ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ரூபாய் ஆயிரம், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டி சென்றால் ரூ.1,000 இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரம், நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தினால் ரூ.500 என்று அபராத தொகை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மது போதையில் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு மட்டும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில் பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆம்புலன்ஸ்சுகளுக்கு வழிவிடாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் புதிய நடைமுறையில் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது புதிய அபராத தொகையை இ செலான் கருவியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பல மடங்கு அதிகரிக்கப்பட்ட அபராதத்தால் வாகன விபத்துகள் குறையுமா? இந்தியாவிலேயே சாலை விபத்தில் தமிழ்நாடு முதலிடம் என்ற கரும்புள்ளி மறையுமா? என்பது குறித்த மக்கள் பார்வை வருமாறு:-

வரவேற்பு

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த அருண்குமார் கூறியதாவது:-

தமிழக அரசு தற்போது போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்து கடுமையாக்கி உள்ளது. அபராத தொகையை உயர்த்தி உள்ளது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் வாகன விபத்துக்கள், உயிர் சேதங்கள் தவிர்க்கப்படும். ஆனால் அவசரமாக செல்பவர்கள் கல்லூரி மாணவிகள், மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் வியாபாரிகள், ஹெல்மெட் அணிய மறந்தால் அபராத தொகை கட்ட நேரிடும். இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். அபராத தொகையை கொஞ்சம் குறைக்கலாம்.

அருப்புக்கோட்டையை சேர்ந்த வங்கி அலுவலர் ரமேஷ் கூறுகையில், ஹெல்மட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது அதிகரித்து உள்ளது கண்டித்தக்கது. இதனால் கூலி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ள நிலையில் தற்போது அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது. முதலில் சாலையை சரி செய்ய வேண்டும்.

மாற்றுப்பாதை

சாத்தூரை சேர்ந்த மாடசாமி:-

அபராத தொகை உயர்த்தப்பட்டது ஒரு தவறான அணுகுமுறை. இது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் உள்ள இடைவெளியை அதிகரிக்கும். இதனால் பொதுமக்களுக்கு போலீசார் மீது வெறுப்பு தான் அதிகமாகும். போலீசார்க்கும் பொது மக்களுக்கும் நல் உறவு இருக்காது. இவர்கள் அபராதம் விதிப்பார்கள் என்பதற்காக பொதுமக்கள் பாதையை மாற்றி செல்கின்றனர். இதனால் போலீசார் மக்களை காப்பாற்றப்போவதில்லை.

சமூக ஆர்வலர் மைக்கேல்மதன்: அபராத தொகை உயர்த்தி வசூலிப்பதன் மூலம் சாலைவிபத்துக்கள் குறையுமா? நாளுக்கு நாள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கனரக வாகனங்கள் ஓட்டுபவர்கள் அதிகளவில் மதுகுடித்துவிட்டு வாகனம் ஒட்டுகிறார்கள். ஆதலால் அனைத்து வாகனங்களில் வருபவர்களையும் மது குடித்து விட்டு வருகிறார்களா என சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

ராஜபாளையத்தை சேர்ந்த கந்தசாமி:-

ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்ற சட்டம் வரவேற்கத்தக்கது. நகருக்கு வெளியே தேசிய நெடுஞ்சாலைகளில் தூர பயணத்தின் போது நாம் ஹெல்மெட் அணிந்து செல்லும்போது நமக்கு மிகுந்த பாதுகாப்பு அளிக்கிறது. அதே நேரத்தில் நமது ராஜபாளையம் நகருக்குள் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டும் பொழுது மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே நகருக்குள் செல்லும்போது மட்டும் சற்று விதிவிலக்கு அளித்தால் நன்றாக இருக்கும்.

மதுவிலக்கு

நரிக்குடி வக்கீல் விக்னேஷ் பாண்டியன்:- காரியாபட்டி, நரிக்குடி பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாகும். வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கும், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கும், அவர்களுடன் பின்னால் உட்கார்ந்து செல்லும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன்.

இருப்பினும் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களின் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் அபராதம் விதிப்பது முரண்பாடாகும். சாதாரண பாமர ஏழை மக்களுக்கு இது ஒரு சுமையாக தான் இருக்கும். அதற்கு மதுவிலக்கை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மறுபரிசீலனை

மாவட்ட சாலை பாதுகாப்புக்குழு உறுப்பினர் அழகு சுந்தரம்:- மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின் அடிப்படையில் தமிழக அரசு வாகன விதிமீறலுக்கு அபராதம் அதிகரித்து உள்ளது என்றாலும் பல மடங்கு அதிக அபராதம் அதிகரித்துள்ளதால் நடுத்தர ஏழை எளிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கட்டிட தொழிலாளி தனது பணிக்கு செல்லும் பொழுது எதிர்பாராத வகையில் ஹெல்மெட் அணியவில்லை என்றால் அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதென்பது அவர் தினசரி ஊதியத்தை விட அதிக தொகையாக உள்ளது. நடுத்தர சாதாரண மக்களை பாதிக்க கூடிய அளவிற்கு இருப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


Next Story