வடசெட்டியந்தலில் அம்மா பூங்கா சீரமைக்கப்படுமா?
வடசெட்டியந்தலில் பராமரிப்பு இன்றி காணப்படும் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகே வடசெட்டியந்தல் ஊராட்சிக்குட்பட்ட ஆசிரியர் நகரில் நடைபயிற்சி மேற்கொள்ளவும், சிறுவர்கள் விளையாடுவதற்கும் பூங்கா அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்ற தமிழக அரசு 2016-2017-ம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ.30 லட்சம் செலவில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டது.
விரைவிலேயே திறப்பு விழாவும் கண்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அம்மா பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டு உடற்பயிற்சி கூடத்தையும் பயன்படுத்தினர். தினமும் காலை மற்றும் மாலையில் பூங்காவில் உள்ள விளையாட்டு உபரகரணங்களில் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.
விளையாட்டு பொருட்கள் சேதமடைந்தன
ஆனால் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப அம்மா பூங்காவும், உடற்பயிற்சி கூடமும் பராமரிக்கப்படவில்லை. இதன் காரணமாக பூங்கா நுழைவு வாயில், சுற்றுச்சுவர், உடற்பயிற்சி கூடம் உடைய ஆரம்பித்தது. விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்தன.
காலப்போக்கில் இங்கு உடற்பயிற்சிக்கு வந்தால் வினையாகி போய்விடுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் உதிக்கத்தொடங்கியது. இதனால் பூங்காவுக்கு வருவோரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் குறைந்தது.
திருடுபோகும் இரும்பு பொருட்கள்
தற்போது பூங்காவில் உள்ள இரும்பு பொருட்கள் திருடுபோகிறது. குறிப்பாக பூங்காவின் நுழைவு வாயில் கேட், இரும்பிலான விளையாட்டு பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
ரூ.30 லட்சத்தில் தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே அம்மா பூங்காவும், உடற்பயிற்சி கூடமும் பயன்படாமல் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. இந்த பூங்காவை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை ஆகும். மக்களின் கோரிக்கை ஏற்கப்படுமா?, பூங்காவும், உடற்பயிற்சி கூடமும் சீரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.