பொதுமக்களின் வரவேற்பை பெற்ற அம்மா பூங்கா மேம்படுத்தப்படுமா?


பொதுமக்களின் வரவேற்பை பெற்ற அம்மா பூங்கா மேம்படுத்தப்படுமா?
x

விராலிமலையில் பொதுமக்களின் வரவேற்பை பெற்ற அம்மா பூங்கா மேம்படுத்தப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

புதுக்கோட்டை

அம்மா பூங்கா

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் அதிக அளவில் மயில்கள் வாழும் இடமாக முருகன் கோவில், மெய்கண்ணுடையாள் அம்மன் கோவில் போன்ற வழிபாட்டுத்தலங்கள் உள்ளது. சிறப்புமிக்க விராலிமலையில் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் ஓய்வு நேரங்களில் பொழுதை கழிக்க பொழுதுபோக்கு அம்சங்கள் ஏதும் இல்லாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த சுமார் 3 வருடங்களுக்கு முன்பு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் தாய் திட்டத்தில் விராலிமலை காமராஜர் நகரில் உள்ள புதிய பஸ்நிலையம் பின்புறம் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி நிலையத்துடன் கூடிய அம்மா பூங்கா கட்டும் பணியானது தொடங்கியது. இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு முன்னாள் அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

உடற்பயிற்சி உபகரணங்கள் சேதம்

அன்று முதல் தினமும் பெற்றோர்கள், முதியவர்கள், சிறுவர்கள் என அனைவரும் ஓய்வு நேரங்களில் இங்கு வந்து பொழுதை கழித்து வந்தனர். இளைஞர்கள் சிறிது காலம் உடற்பயிற்சி கூடத்தை பயன்படுத்தினர். ஆனால் காலம் செல்ல செல்ல போதிய பராமரிப்பு இல்லாததால் பூங்காவில் இருந்த விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி கூடத்தில் இருந்த உபகரணங்கள் என அனைத்தும் சேதமடைந்துவிட்டது.

மேலும் உடற்பயிற்சிக்கு என வைக்கப்பட்டுள்ள உபகரணங்கள் இருக்கும் அறையை முறையாக பராமரிக்காததால் அதில் உள்ள உடற்பயிற்சி உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்து தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. மேலும் உடற்பயிற்சி நிலையமும் பூட்டப்பட்டு கிடக்கிறது. இதனால் இளைஞர்கள் பணம் செலுத்தி தனியார் உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மேலும் தினமும் மாலை நேரங்களில் தங்களது குழந்தைகள் விளையாடுவதற்காக இந்த பூங்காவிற்கு அழைத்து வரும் பெற்றோர்கள் போதிய அளவு விளையாடுவதற்கு விளையாட்டு உபகரணங்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய இந்த அம்மா பூங்காவை மேம்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

சீரமைத்தால் உதவியாக இருக்கும்

விராலிமலையை சேர்ந்த இல்லத்தரசி முத்துக்குமாரி:- கடந்த 2 வருடங்களுக்கு முன்பு விராலிமலை பஸ் நிலையம் அருகே பூங்கா மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. விராலிமலையில் பொழுதுபோக்குக்கு என ஆரம்பிக்கப்பட்ட முதல் திட்டம் என்பதால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும், வரவேற்பையும் பெற்றது. ஆனால் போதிய பராமரிப்பு இன்றி உள்ளதால் வெறும் மரங்கள் மட்டுமே இருப்பது போன்ற பிம்பம் உள்ளது. மேலும் குழந்தைகள் விளையாடும் அனைத்து உபகரணங்களும் நாட்கள் ஆனதால் பழுதாகி உள்ளது. நீரூற்றுக்கென அமைக்கப்பட்ட இடமும் செயல்படாமல் உள்ளது. அதில் செயற்கை நீரூற்று அமைத்து அதில் மீன்களை விட்டால் விளையாட ஏதுவாக இருக்கும். எனவே மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இந்த பூங்காவை சீரமைத்தால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

விராலிமலை அருகே வடுகப்பட்டியை சேர்ந்த கோவிந்தவாசன்:- விராலிமலைக்கு முதன் முதலில் அரசின் மூலம் கொண்டுவரப்பட்ட அம்மா பூங்கா இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் பூங்காவின் ஒரு பகுதியில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது தான். ஆனால் பல மாதங்களாக அந்த அறை திறக்கப்படாமல் இருப்பதால் என்னை போன்ற அனைத்து இளைஞர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக பணம் கொடுத்து தனியார் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இந்த உடற்பயிற்சி கூடத்தில் உள்ள உபகரணங்களை பயன்படுத்தாமல் இருப்பதால் அது பழுதடைந்து மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே மூடிக்கிடக்கும் உடற்பயிற்சி கூடத்தை திறந்து பழுதடைந்த உபகரணங்களை சரி செய்து அதிகமான உடற்பயிற்சி உபகரணங்களை வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.

குழந்தைகள் மத்தியில் ஆர்வம் குறைவு

விராலிமலையை சேர்ந்த லோகநாதன்:- விராலிமலைக்கு என கொண்டுவரப்பட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களில் பொதுமக்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றது இந்த அம்மா பூங்கா. திறக்கப்பட்ட நாள் முதலே அதிக ஆர்வமுடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பூங்காவை பயன்படுத்த தொடங்கினர். ஆனால் குறைந்த அளவே விளையாட்டு உபகரணங்கள் இருப்பதால் குழந்தைகள் மத்தியில் ஆர்வம் குறைகிறது. மேலும் பூங்காவிற்கு வருபவர்கள் தங்களின் உடல் உபாதையை கழிக்க இந்த பூங்காவில் கழிப்பிட வசதி இருந்தும் அது திறக்கப்படாமல் உள்ளது. மேலும் போதிய பராமரிப்பு இல்லாததால் சிலநேரங்களில் விஷ பூச்சிகள் வரும் நிலையும் உள்ளது. எனவே மக்களின் வரவேற்பை பெற்ற இந்த அம்மா பூங்காவை தரம் உயர்த்தி அதிக விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் பயன் உள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story