விருதுநகரில் அம்மா உணவகம் புனரமைக்கப்படுமா?


விருதுநகரில் அம்மா உணவகம் புனரமைக்கப்படுமா?
x

விருதுநகரில் அம்மா உணவகத்தை புனரமைக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்

விருதுநகரில் அம்மா உணவகத்தை புனரமைக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அம்மா உணவகம்

கடந்த ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அம்மா உணவகங்களில் குறைந்த விலையில் மக்கள் பயன்பெறும் வகையில் உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என்று அறிவித்தார். நகர்ப்புறங்களில் உள்ள அம்மா உணவகங்கள் நகராட்சிகளின் பராமரிப்பில் விடப்பட்டுள்ளன. விருதுநகர் நகராட்சி பகுதியில் 2 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது விருதுநகரில் அம்மா உணவகத்தில் விற்பனை குறைந்த நிலையில் பணியாளர்களுக்கு 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில் தத்தளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தினசரி ரூ.3,600-க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலையில் ரூ.2ஆயிரத்திற்கு மட்டுமே உணவு வகைகள் விற்பனையாவதால் அம்மா உணவகத்தின் செயல்பாடு தொடருமா என்பது கேள்வி குறியாக உள்ளது.

திறந்த வெளியில் உணவு

பணியாற்றும் 12 ஊழியர்களில் விற்பனை குறைவால் 4 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து விற்பனையை உயர்த்தாவிட்டால் பாதிப்பு ஏற்படும் என்ற நிலையில் அதிகாரியின் அறிவுறுத்தலின்படி விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் திறந்த வெளியில் அம்மா உணவக உணவு வகைகள் விற்பனை செய்யப்படும் நிலை உள்ளது.

உரிய ஏற்பாடுகள் இன்றி இவ்வாறு திறந்தவெளியில் உணவு வகைகளை விற்பது என்பது ஏற்புடையது அல்ல. உணவு வகைகளின் விற்பனைக்கான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். இதுபற்றி விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசனின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது அவர் அம்மா உணவகத்தை விட்டு வெளியே வந்து விற்பனை செய்வது என்பது ஏற்புடையதல்ல. அம்மா உணவகத்தில் விற்பனையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். எனவே நகராட்சி நிர்வாகம் அம்மா உணவகத்தை புனரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பணியாற்றும் ஊழியர்களும் இதை உணர்ந்து விற்பனையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.


Next Story