வேலை நாட்கள் 5 ஆக குறைந்தால் வங்கி சேவை பாதிக்குமா?


வேலை நாட்கள் 5 ஆக குறைந்தால் வங்கி சேவை பாதிக்குமா?
x

வேலை நாட்கள் 5 ஆக குறைத்தால் வங்கி சேவை பாதிக்குமா? என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்

ஒரு பொருளை கொடுத்து, மற்றொரு பொருளை வாங்கிய பண்டமாற்று முறை மாறி நாணயங்கள் புழக்கத்துக்கு வந்தன. அவை ரூபாய் நோட்டுகளாக மாறியதும் மக்களிடம் பண பரிமாற்றம் அதிகரிக்க தொடங்கியது. இதற்கு வங்கிகளே முதுகெலும்பாக திகழ்கின்றன.

வங்கி சேவைகள்

உலகில் எந்த மூலையில் இருந்தும், வங்கிகள் மூலம் பண பரிமாற்றம் செய்ய முடிகிறது. அதேபோல் சிறு தொழில்களில் தொடங்கி பெரிய தொழிற்சாலைகள் வரை உருவாக வங்கிகளின் கடன் சேவை அளப்பரியது. வங்கிகளால் அனைத்து தரப்பு மக்களிடமும் சேமிப்பு பழக்கம் அதிகரித்து இருப்பதை மறுக்க முடியாது.

இத்தகைய வங்கி சேவையை பெறுவது, ஒருகாலத்தில் சாதாரண விஷயமாக இல்லை. வங்கி கணக்கு தொடங்குவதில் இருந்து சேமிப்பு கணக்கில் பணம் செலுத்துதல், கணக்கில் இருந்து பணம் எடுத்தல் ஆகியவற்றுக்கு கால்கடுக்க காத்திருக்கும் நிலை இருந்தது. மேலும் வங்கியில் யாரும் அவ்வளவு எளிதாக கடன் பெற்று விடமுடியாத நிலை இருந்தது.

டிஜிட்டல் மயம்

இதனால் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் மிகவும் குறைவாகவே இருந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வங்கி கணக்கு இல்லாதவர்கள் ஒரு ஊரில் ஒன்றிரண்டு பேர் இருந்தாலே அதிசயம் தான். அந்த அளவுக்கு வங்கி சேவையின் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதற்கிடையே அறிவியல் புரட்சியால் வங்கிகளின் சேவை அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டன.

வங்கி சேமிப்பு கணக்குகளில் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், கடன் செலுத்துதல் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் மேற்கொள்ள முடிகிறது. வீட்டில் இருந்தபடியே ஒருவர், தனது கணக்கில் இருந்து மற்றொருவர் கணக்குக்கு எளிதாக பணத்தை பரிமாற்றம் செய்து விடலாம்.

இதற்கு வசதியாக ஒவ்வொரு வங்கியும் தனியாக செயலியை உருவாக்கியதோடு, அதை பயன்படுத்தும்படி வாடிக்கையாளர்களிடம் அறிவுறுத்தி வருகிறது. மேலும் அவசர தேவைக்கு பணம் எடுக்க வேண்டும் என்றால் கூட ஏ.டி.எம். மையத்துக்கு சென்றால் போதும், வங்கிக்கு செல்ல வேண்டியது இல்லை. எனவே குறைவான தொகையை எடுக்க ஏ.டி.எம். மையத்தை பயன்படுத்தும்படி அறிவுறுத்துகின்றனர்.

5 நாட்கள் மட்டுமே வேலை

ஆன்லைனில் பண பரிமாற்றம் செய்வதில் சிலநேரம் குளறுபடிகள் நடக்கின்றன. ஏ.டி.எம். கார்டு மூலம் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் எடுக்க முடியவில்லை. எனவே பெரிய தொகையை எடுப்பதற்கு வங்கிக்கு செல்ல வேண்டியது உள்ளது.

அதேபோல் நகைக்கடன், தொழில்கடன், பெரிய தொகையை செலுத்துதல் உள்பட பல்வேறு விஷயங்களுக்காக மக்கள் நேரடியாக வங்கிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதேநேரம் மாதத்தின் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.

இதனால் அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமை, அடுத்து வரும் திங்கட்கிழமையில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் அனைத்து சனிக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கு ஒப்புதல் பெற முயற்சி நடக்கிறது. இதற்கு ஒப்புதல் கிடைத்து விட்டால், வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் நிலை ஏற்படும். இந்த சனிக்கிழமை விடுமுறையை சரிசெய்ய மற்ற நாட்களில் கூடுதல் நேரம் பணி செய்யப்பட இருப்பதாகவும் தெரிகிறது.

சேவை பாதிக்காது

இதுபற்றி திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரிடம் கேட்டபோது அவர்கள் கூறிய கருத்துகள் விவரம் வருமாறு:-

வங்கி அதிகாரி ஜெனோ வில்பிரட்:- சேமிப்பு கணக்கு மூலம் பொதுமக்களிடம் இருந்து பணத்தை திரட்டுதல், அதை தேவைப்படும் நபருக்கு கடனாக வழங்குதல், கடனை திரும்ப வசூலித்தல் ஆகியவை வங்கியின் முக்கியமான பணிகள் ஆகும். இந்த 3 பணிகளுமே தற்போது ஆன்லைன் மயமாகிவிட்டது. வங்கி கணக்கு தொடங்கும் போது விசாரணைக்காக ஒருமுறை மட்டுமே வந்தால் போதும் என்ற நிலை உருவாகிவிட்டது. மேலும் ஏ.டி.எம். மையங்களில் எந்த நேரத்திலும் மக்கள் பணம் எடுத்து கொள்கின்றனர். எனவே வங்கிகளின் வேலைநாட்களை 5 ஆக குறைப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாது.

ரோகிணி (அழகுகலை நிபுணர், பழனி):- வங்கி பணி நாட்களை 5 ஆக குறைத்தால் பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. அதேநேரம் வங்கி செயல்பாடுகள் அனைத்தும் ஆன்லைன் மயமாகிவிட்டது. பணம் செலுத்துதல், கடன் பெறுதல், கடனை திரும்ப செலுத்துதல் என அனைத்தும் ஆன்லைனிலேயே மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.

பண தட்டுப்பாடு ஏற்படும்

ஆர்தர் (ஆசிரியர், திண்டுக்கல்):- அரசு, தனியார் ஊழியர்கள் மட்டுமின்றி சாதாரண தொழிலாளர்களுக்கும் ஆன்லைனில் சம்பளம் வழங்கும் காலம் இதுவாகும். எனவே அனைவரும் ஏ.டி.எம். மையங்களில் தான் பணம் எடுக்க வேண்டும். தற்போதே ஞாயிற்றுக்கிழமையில் பல ஏ.டி.எம். மையங்களில் பணம் இருப்பது இல்லை. சனி, ஞாயிறு என 2 நாட்கள் விடுமுறை என்றால் ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்படும். பெரும்பாலான மக்கள் விடுமுறை நாட்களில் பொருட்கள் வாங்குவது குறைந்து வணிகம் பாதிக்கும். இதனால் அரசுக்கு ஜி.எஸ்.டி. வருவாயும் குறையலாம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சனிக்கிழமை தான் வங்கிக்கு செல்வோம். இனிமேல் விடுப்பு எடுத்து செல்லும் நிலை ஏற்படும்.

அன்பரசு (வணிகர், குஜிலியம்பாறை):- வங்கி வேலை நாட்கள் 5 ஆக குறைக்கப்பட்டால் வணிகர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். வங்கிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை விடப்படுவதால் தொழிலாளர்கள் உள்பட பணம் எடுக்க முடியாமல் சிரமப்படுவார்கள். மேலும் திங்கட்கிழமைகளில் வங்கிகளில் கூட்டம் மேலும் அதிகரிக்கும். அதுவும் மக்களுக்கு சிரமத்தை கொடுப்பதோடு, தேவையற்ற கால விரயத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story