விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?


விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
x

விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்


விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பழைய பஸ் நிலையம்

விருதுநகர் மையப்பகுதியில் பழைய பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து அனைத்து டவுன் பஸ்களும் மாவட்டத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கான புறநகர் பஸ்களும் இயக்கப்படுகின்றன. பள்ளி மாணவ-மாணவிகளும், வேலைக்கு வரும் கிராம மக்களும் இங்கு தான் வந்து செல்லும் நிலை உள்ளது. இந்த பஸ் நிலையம் கடந்த 2015-ம் ஆண்டு நகராட்சி நூற்றாண்டு நிதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது. இந்த பஸ் நிலையம் புனரமைக்கப்படும் போது இங்கு அமைக்கப்பட்டிருந்த குளிரூட்டப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் அகற்றப்பட்டு புனரமைப்பு பணி முடிந்த பின்பு மீண்டும் இங்கு நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த மையத்தில் இருந்து அகற்றப்பட்ட எந்திரங்கள் மாயமாகிவிட்ட நிலையில் மீண்டும் அந்த மையம் அமைக்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து சமூக நல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் அமைக்கப்பட்டது. ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்த மையமும் தொடங்கப்பட்ட சில நாட்களில் முடங்கி விட்டது. தற்போது பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு நிரந்தர குடிநீர் வழங்கும் மையம் செயல்படாத நிலையில் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகள் காட்சி பொருளாக உள்ளது.

நவீன கழிப்பறை

பஸ் நிலையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நவீன கழிப்பறை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. தொடக்கத்தில் முறையாக பராமரிக்கப்பட்ட இந்த கழிப்பறை தற்போது இதன் பராமரிப்பு பற்றி நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலை நீடிக்கிறது. போதிய அளவு தண்ணீர் வசதி இல்லாத நிலையில் கழிப்பறையின் சுகாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது.

இதேபோன்று பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் தங்கும் இடத்திலும் இருக்கைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன.

எனவே நகராட்சி நிர்வாகம் இந்த பழைய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story