ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை அமைந்துள்ள சலுப்பை கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுமா?


ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை அமைந்துள்ள சலுப்பை கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுமா?
x

ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை அமைந்துள்ள சலுப்பை கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்

துறவுமேல் அழகர் கோவில்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள சலுப்பை கிராமத்தின் எல்லையில் துறவுமேல் அழகர் கோவில் உள்ளது. சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மீன்சுருட்டி மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கோவிலில் உள்ள யானை சிலை புராதான சின்னமாக கடந்த 2020-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை இதுவாகும்.

இந்த யானை சுதை குறித்து பல்வேறு புராணக் கதைகள் கூறப்பட்டாலும், ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்து வென்றதின் நினைவாக அங்கிருந்து கொண்டுவரப்பட்ட துர்க்கை அம்மன் சிலை சலுப்பை கிராமத்தில் உள்ள துறவுமேல் அழகர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருவதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ராஜேந்திர சோழன் படையில் இருந்த யானைப்படை மற்றும் குதிரைப்படை வீரர்கள் இப்பகுதியில் தங்க வைக்கப்பட்டதாகவும் அதன் பொருட்டு அக்காலத்தில் இங்கு யானை சுதை அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

யானை சுதை வேலைப்பாடுகள்

கி.பி. 16-17-ம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் வெல்லம், கடுக்காய் மற்றும் சுண்ணாம்பு உள்ளிட்ட கலவையினால் சுட்ட செங்கற்கள் ஆகியவற்றால் இந்த யானை சிலை கட்டப்பட்டுள்ளது. சுமார் 33 அடி நீளமும், 12 அடி அகலமும், 60 அடி உயரமும் கொண்ட இந்த யானை சுதை இன்றளவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த யானை சுதையின் கால்களுக்கு இடையே பக்கவாட்டு பகுதிகளில் 3 பேர் என இருபுறங்களிலும் 6 பேர் தாளமிடும் கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

யானை தனது துதிக்கையால் ஒருவரை பிடித்து கொண்டிருப்பது போன்றும், அவரது கால்கள் யானையின் கால்களுக்கு இடையே சிக்கிக் கொண்டிருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த யானை சிலையின் கழுத்து உடலின் இரு புறங்களிலும் மணிகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாக காட்சியளிக்கிறது.

புராதான சின்னமாக அறிவிப்பு

இந்த யானை சிலை ஆசியாவிலேயே மிகப்பெரிய சுதை சிலை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழக தொல்லியல் துறை இந்த சுதை சிற்பத்தை புராதான சின்னமாக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந் தேதி அறிவித்தது. இதைத்தொடர்ந்து பாசிப்படர்ந்து காணப்பட்ட சிற்பம் தொல்லியல் துறையால் தூய்மைப்படுத்தப்பட்டு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த சுதை சிற்பம் காண்போரை கவரும் வகையில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

புராதான சின்னமாக அறிவிக்கப்பட்டதை அறிந்த பின்னரே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இருப்பினும், நகரை விட்டு சற்று தள்ளி கிராமப்புறத்தில் இருப்பதால் பலரும் அங்கு செல்வதில்லை எனவும், வாகனங்கள் சென்றுவர தரமான சாலை வசதிகள், கடைகள் மற்றும் உணவகங்கள் இல்லை என்பது சுற்றுலா பயணிகளின் குறையாக உள்ளது. எனவே சலுப்பை கிராமத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

சாலையை சீரமைக்க வேண்டும்

சென்னையை சேர்ந்த தொல்காப்பியன்:- கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு அடிக்கடி குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கம். சில சமயம் அழகர் கோவிலுக்கு செல்வது உண்டு. சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அழகர் கோவிலுக்கு மீன்சுருட்டியில் இருந்து செல்வது தான் பக்கம். ஆனால் மீன்சுருட்டியில் இருந்து குண்டவெளி வழியாக அழகர் கோவில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இங்குள்ள யானை சிலை உலக புராதான சின்னமாக அறிவிக்கப்பட்டது. இதன் பின்னரும் சாலை வசதிகள் சரியாக இல்லாததால் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சாலை வசதிகள் சரி இல்லாத காரணத்தால் இங்கு வருவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இங்குள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கழிவறை வசதி...

திருப்பனந்தாள் பகுதியை சேர்ந்த சுதன்:- உலக புகழ்பெற்ற யானை சுதை சிலையை பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வருவது வழக்கம். ஆனால் இங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. குறிப்பாக கழிவறை வசதி இல்லாததால் பெண்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் இங்கு கடைகள் மற்றும் உணவகங்கள் இல்லாததால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இங்கு வர தயக்கம் காட்டி வருகிறார்கள். இருப்பினும் சில சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்டவைகளை வாகனங்களில் எடுத்து வந்து இந்த சிலையை கண்டு களித்து செல்கிறார்கள். எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சலுப்பை கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த ராஜ்:- புராதான சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை சிலையை பார்க்க தினமும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

ஜெயங்கொண்டத்தில் இருந்து சலுப்பை கிராமம் வழியாக மீன்சுருட்டி வரை ஒரு தனியார் மினி பஸ் ஒன்றும், அரசு டவுன் பஸ் மற்றும் இந்த வழியாக காட்டுமன்னார்கோயில் வரை ஒரு பஸ் சென்று வருகின்றன.

இந்த வழித்தடத்தில் மேலும் ஒரு அரசு டவுன் பஸ் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story