தொழிற்பேட்டை கொண்டு வரப்படும்


தொழிற்பேட்டை கொண்டு வரப்படும்
x

காட்பாடி தொகுதியில் தொழிற்பேட்டை கொண்டு வரப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலூர்

காட்பாடி

காட்பாடி தொகுதியில் தொழிற்பேட்டை கொண்டு வரப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

பகுதி நேர ரேஷன் கடை

காட்பாடி தாலுகா, சேனூர் ஊராட்சி ஆர்.ஜி. முல்லை நகரில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் குமரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணஅய்யப்பதுரை வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆர்.ஜி.முல்லைநகர் பகுதியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கட்டிடம் வாடகை கட்டிடத்தில் இயங்கும். இந்த ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டிடம் கட்டித்தரப்படும்.

காட்பாடி தொகுதியில் 1971-ம் ஆண்டு நான் சட்டமன்ற உறுப்பினராக வந்த பிறகுதான் குடியாத்தம், பிச்சனூர், கே.வி.குப்பம், மேல்மாயில் உள்பட பல்வேறு இடங்களில் உயர்நிலைப் பள்ளிகளை கொண்டு வந்தேன்.

தொழிற்பேட்டை

காட்பாடி தொகுதியில் கல்வியியல் கல்லூரி, சட்டக்கல்லூரி, நீதிமன்றம், தாலுகா அலுவலகம், பல்கலைக்கழகம், காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் என பல்வேறு அலுவலகங்களை கொண்டு வந்துள்ளேன்.

காட்பாடி தொகுதியில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தொழிற்பேட்டை கொண்டு வரப்படும்.

காவிரிநீரை காட்பாடி வரை கொண்டு வந்துள்ளேன். மதி நகர் அருப்புமேடு அவுசிங் போர்டு சாலையை சீரமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்சி இன்னும் 4 ஆண்டுகள் இருக்கிறது. மக்களின் கோரிக்கைகள் குறித்து என்னுடைய கவனத்திற்கு வந்தால் அது கண்டிப்பாக தீர்க்கப்படும். அதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் நன்றாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, துணைமேயர் எம்.சுனில்குமார், காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், துணைத்தலைவர் சரவணன், தாசில்தார் ஜெகதீஸ்வரன், ஊராட்சி தலைவர் சாந்தி மணி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில செயலாளர் செல்வம், கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குனர் எஸ்.டி.அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்பது மாறுபட்ட கருத்தல்ல. அதனை தடை செய்ய வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடு தான். தமிழகம் முழுவதும் உள்ள நதிகள், ஆறுகள், ஏரிகள் நீர்நிலைகள் போன்றவற்றில் நீர் வளத்துறை மூலம் கணக்கீடு செய்கிறோம். நீர்நிலைகள் குறித்து முழுமையான கணக்கீடு வந்தால் அது நமக்கு பயனுள்ளதாக அமையும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சிலர் நீர்நிலைகளில் வீடுகள் கூட கட்டி உள்ளனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி அந்த வீடுகள் அப்புறப்படுத்தப் பட்டுள்ளது.

நீர்நிலைகளை ஆளுங்கட்சி நிர்வாகிகள் ஆக்கிரமித்து இருப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் கூறியுள்ளார். நீர்நிலையை ஆளுங்கட்சியினர் இல்லை, அமைச்சரே ஆக்கிரமித்து இருந்தால்கூட ஆக்கிரமிப்பு அகற்றப்படும். அதை சொன்ன எதிர்க்கட்சித் தலைவரே ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலும் ஆக்கிரமிப்பு அகற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story