மீண்டும் படகு சவாரி தொடங்கப்படுமா?


மீண்டும் படகு சவாரி தொடங்கப்படுமா?
x

மீண்டும் படகு சவாரி தொடங்கப்படுமா?

தஞ்சாவூர்

செல்லிக்குறிச்சி ஏரி நிரம்பியதால் மீண்டும் படகு சவாரி தொடங்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

செல்லிக்குறிச்சி ஏரி நிரம்பியது

அதிராம்பட்டினம் அருகே செல்லிக்குறிச்சி ஏரி உள்ளது. இந்த ஏரி 5 கிலோமீட்டர் தூரமும், 320 ஏக்கர் பரப்பளவும் கொண்டது. கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு காவிரி நீர் வந்து சேர்ந்த நிலையிலும் இந்த செல்லிக்குறிச்சி ஏரி தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தது. இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டினால் இப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் அதிராம்பட்டினம் நகராட்சி ஆகிய பகுதிகள் பயன்பெறும்.

பட்டுக்கோட்டை நகர பகுதியில் நிலத்தடி நீர் உயர்ந்து கோடை காலங்களிலும் குடிநீர் பற்றாக்குறை இருக்காது. தொடர்ந்து செல்லிக்குறிச்சி ஏரி தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்ட சூழலில் கடந்த சில நாட்களாக பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் செல்லிக்குறிச்சி ஏரி நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் ஏரி கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனால் கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகர் பகுதி மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

படகு சவாரி

இதன் மூலம் புதுக்கோட்டை உள்ளூர் மட்டுமல்லாமல் நடுவிக்காடு, மழவேனிற்காடு, பழஞ்சூர், அதிராம்பட்டினம், அணைக்காடு மற்றும் தொக்காலிக்காடு ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பயனடையக்கூடும்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஏரியில் படகு சவாரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. அப்போது படகில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை சென்று வந்தனர். எனவே மீண்டும் படகு சவாரி அமைத்து சுற்றுலா தலமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலா தலமாக்க வேண்டும்

இதுபற்றி விவசாயி ஒருவர் கூறுகையில்,

செல்லிக்குறிச்சி ஏரி நிரம்பினால் நாங்கள் காவிரி ஆற்று நீரை நம்பத்தேவையில்லை. தமிழ அரசு சில வருடங்களுக்கு முன்பு ஏரி குளங்களை தூர்வார தனியார் மண் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்தது. இதையடுத்து ஏரியில் மண் எடுக்கப்பட்டது. 2 கிலோ மீட்டர் தூரம் நீளமும், 500 மீட்டர் அகலமும் 3 அடி ஆழமும் கொண்டு ஒரே சீராக தூர்வாரினால் ஒரு போகம் செய்யவேண்டிய விவசாயத்தை இரண்டுபோகம் செய்யமுடியும். எனவே மழை இல்லாமல் இருக்கும்போதே அதற்கான நடவடிக்கையை தொடர்ந்து செய்யவேண்டும் என்றார்.

இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில்,

செல்லிக்குறிச்சி ஏரி அதிராம்பட்டினத்தில் மிகப்பெரிய ஏரியாகும். தண்ணீர் முழு கொள்ளளவு எட்டினால் பார்ப்பதற்கு கடலை போன்று காட்சியளிக்கும். இதில் 4 ஆண்டுகளுககு முன்பு படகு சவாரி பயன்பாட்டில் இருந்து வந்தது. அதன் பிறகு படகு சவாரி பயன்பாட்டில் இல்லை. அந்த ஏரியை சரிசமமாக தூர்வாரி ஏரியை சுற்றி பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரித்து மீண்டும் படகு சவாரி மூலம் சுற்றுலா தலமாக்க வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story