ஊரணிபுரம் பிரதான சாலையில் நாட்டு வெடி-பட்டாசு வெடிப்பது தடுக்கப்படுமா?
ஊரணிபுரம் பிரதான சாலையில் நாட்டு வெடி-பட்டாசு வெடிப்பது தடுக்கப்படுமா?
விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஊரணிபுரம் பிரதான சாலையில் நாட்டு வெடி-பட்டாசு வெடிப்பதை தடுத்திட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பிரதான சாலையில் வெடி- வெடிப்பதால் ஆபத்து
தஞ்சை மாவட்டம் ஊரணிபுரம் பகுதியில் சில தனியார் திருமண மண்டபங்கள் உள்ளன. இந்த மண்டபங்களில் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கும், இதேபோல் இப்பகுதியிலுள்ள சிலரது வீடுகளில் நடைபெறும் விசேஷங்களுக்கும் பெண்கள் உள்ளிட்ட உறவினர்கள் கூட்டமாக சேர்ந்து தட்டு-தாம்பூலம் எடுத்து குதிரை மேளதாளங்களுடன் சீர் வரிசை எடுத்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இவ்வாறு சீர் வரிசை எடுத்து செல்வோர் கூட்டமாக சாலையில் நின்று கொண்டு, அதே சாலையில் பலத்த சத்தத்தை கிளப்பும் நாட்டு வெடிகள் மற்றும் பட்டாசுகளை அதிகளவில் வெடிக்கின்றனர். இவ்வாறு அத்துமீறி வெடி வெடிக்கப்படுவதால், இந்த வழியே வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் இச்சாலையை கடந்து செல்ல முடியாமல் திணறி நிற்கிறார்கள். மேலும் திடீரென பிரதான சாலையில் நாட்டு வெடிகளும், பட்டாசுகளும் வெடிக்கப்படுவதால் விபத்துகள் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. மேலும் வெடிகள் வெடிக்கும் போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஊரணிபுரம் பிரதான சாலையில் அன்றாடம் குழந்தைகளை ஏற்றி செல்லும் பள்ளி வாகனங்கள், பொதுமக்கள் சென்று வரக்கூடிய பஸ்கள், எந்நேரமும் சாரை- சாரையாக செல்லும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஊரணிபுரம் பிரதான சாலையில் நாட்டு வெடி மற்றும் பட்டாசு வெடிப்பதை தடுத்திட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.