தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்; தமிழகத்தில் 16-ந் தேதி பஸ்கள் ஓடுமா?


தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்; தமிழகத்தில் 16-ந் தேதி பஸ்கள் ஓடுமா?
x

மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதால், தமிழகத்தில் 16-ந் தேதி பஸ்கள் ஓடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும், குறைந்தபட்ச ஊதியத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் வருகிற 16-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இதனால் வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ள இந்த வேலை நிறுத்த போராட்டத்தில், தபால், தொலைதொடர்பு துறை, ரெயில்வே, மின்சார வாரியம், தொழிற்சாலைகள், போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் விவசாய சங்கத்தினரும் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்தில் பங்குபெறுவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தொ.மு.ச. தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொ.மு.ச., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., டி.டி.எஸ்.எப்., உள்பட 9 சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சி.ஐ.டி.யு. தொழிற்சங்க செயலாளர் சவுந்தரராஜன், நாடு தழுவிய அளவில் வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ள போராட்டத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முழுமையாக பங்கேற்க உள்ளன. இதனால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்படும்" என்றார்.அதேநேரத்தில், போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் பஸ் போக்குவரத்து பாதிக்காத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து கழக நிர்வாக வட்டாரங்களில் கூறப்படுகிறது.


Next Story