இடைத்தேர்தலில் போட்டியிடும்சுயேச்சை வேட்பாளர்களுக்கு இன்று சின்னம் ஒதுக்கீடு;தேர்தல் நடத்தும் அதிகாரி கே.சிவக்குமார் தகவல்
இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி கே.சிவக்குமார் கூறினார்.
இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி கே.சிவக்குமார் கூறினார்.
சின்னம் ஒதுக்கீடு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இதில் 83 பேரின் வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டன. காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் உள்பட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுடன் சுயேச்சை வேட்பாளர்களும் இந்த களத்தில் இறங்கி இருக்கிறார்கள். வேட்புமனுவை வாபஸ் பெற இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிவரை காலக்கெடு உள்ளது. அதைத்தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு நடக்கிறது.
இதை முன்னிட்டு நேற்று தேர்தல் ஆணையத்தால் இடைத்தேர்தலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் வேட்பாளர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. இதை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு, தங்களுக்கு பிடித்த 3 சின்னங்களை குறித்துக்கொண்டனர். இந்த சின்னங்களில் ஏதேனும் ஒன்று அவர்களுக்கு வழங்கப்படும். ஒருவருக்கு மேல் ஒரே சின்னத்தை கேட்டு இருந்தால் குலுக்கல் முறையில் சின்னம் வழங்கப்படும்.
அதிகாரி தகவல்
இதுகுறித்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளருமாக கே.சிவக்குமார் கூறியதாவது:-
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு அவரவர் சின்னங்கள் கிடைக்கும். பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கும். சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள சின்னங்களில், அவர்கள் விரும்பும் சின்னங்கள் ஒதுக்கப்படும். இதுதொடர்பான நடைமுறைகள் நாளை (அதாவது இன்று) தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின் படி நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.