சேதமடைந்த கட்டிடங்களை இடித்து விட்டு புதிதாக கட்டப்படுமா?
பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த கட்டிடங்களை இடித்து விட்டு புதிதாக கட்டப்படுமா? என மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கொள்ளிடம்:
பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த கட்டிடங்களை இடித்து விட்டு புதிதாக கட்டப்படுமா? என மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பழையாறு மீன்பிடி துறைமுகம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இயற்கை துறைமாக விளங்கிவரும் இந்த துறைமுகம் மூலம் 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் 350-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தினந்தோறும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். துறைமுக வளாகத்தில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீன்பிடி வலை பின்னுதல், மீன்களை தரம் பிரித்தல், விற்பனைக்கு அனுப்புதல், கருவாடு விற்பனை செய்தல், கருவாடுகளை தரம் பிரித்தல், ஐஸ்கட்டி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருவாடு உலர் தளங்கள்
பழையாறு மீன்பிடி துறைமுகம் தினந்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்து வருகிறது. கருவாடு உலர்தலங்களில் கருவாடுகளை காய வைக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு உரிய கழிவறை வசதி இல்லை. இதனால் துறைமுகத்தில் வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க சிரமம் அடைந்து வருகின்றனர்.
துறைமுகத்தில் இருந்த கழிவறை கட்டிடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதில் குளியலறை வசதி, கழிப்பறை வசதி, நீர்த்தேக்க தொட்டி, மின் மோட்டார், கருவாடு பதப்படுத்தி வைக்கும் அறை, மீன்வளத்துறை அலுவலகம், மீன் உலர்தளம் உள்ளிட்ட வசதிகள் அமைந்துள்ளன.
சேதமடைந்த கட்டிடங்கள்
மீன் வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த துறைமுகத்தில் உள்ள கட்டிடகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் பராமரிப்பின்றி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கட்டிடங்கள் யாருக்கும் பயன்படாமல் உள்ளது. இந்த கட்டிடங்களை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கூறுகையில் இந்த துறைமுகம் மாவட்டத்திலேயே சிறந்த மீன்பிடி துறைமுகமாக செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கழிவறை வசதி இல்லாததால் பெண்கள் அவதி
இங்கிருந்து மீன்களை வாங்கி செல்வதற்கு நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து செல்கின்றனர். பெண் வியாபாரிகளும் வந்து செல்கின்றனர். துறைமுகத்தில் கழிவறை வசதி இல்லாததால் வியாபாரிகள், மீனவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழையாறு துறைமுகத்தில் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ள கழிவறை கட்டிடம் உள்பட அனைத்து கட்டிடங்களையும் இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என்றார்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து கூழையாறு கிராமத்தை சேர்ந்த கொள்ளிடம் ஒன்றிய குழு உறுப்பினர் அங்குதன் கூறுகையில், பழையாறு மீன்பிடி துறைமுக வளாகத்தில் உள்ள மீன் பதப்படுத்தும் மையம், ஐஸ்கட்டி தயாரித்தல் நிலையம், மீன்வளத்துறை அலுவலகம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கருவாடு பாதுகாப்பு அறை ஆகிய கட்டிடங்கள் எந்தவித பராமரிப்பின்றி சேதமடைந்து பயன்பாடு இல்லாமல் உள்ளது.
மேலும் அங்கு உள்ள உயர்கோபுர மின்விளக்கும் பழுதடைந்துள்ளது. இங்கு கழிவறை வசதி இல்லாமல் உள்ளதால் அனைவரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே பழையாறு துறைமுகத்தில் சேதமடைந்த கழிவறை கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பழையாறு துறைமுகத்தில் பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.