குற்ற சம்பவங்களை தடுக்க மின் விளக்குகள் பொருத்தப்படுமா?
முள்ளுப்பாடி ரெயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க மின் விளக்குகள் பொருத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கிணத்துக்கடவு,
முள்ளுப்பாடி ரெயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க மின் விளக்குகள் பொருத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
செல்போன் பறிப்பு
கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் முள்ளுப்பாடி ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. அதன் கீழ் பகுதியில் சர்வீஸ் சாலை உள்ளது. அப்பகுதியில் இரவு நேரங்களில் பொதுமக்கள், தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் ஊழியர்கள் திரும்பி வரும் போது மர்ம நபர்கள் சிலர் நின்று கொண்டு கத்தியை காட்டி மிரட்டி செல்போன்களை பறித்து வருகின்றனர். இதற்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மின் விளக்கு இல்லாததே காரணம் ஆகும்.
இதுகுறித்து பொதுமக்கள் ரெயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் குற்ற சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். எனவே, குற்ற சம்பவங்களை தடுக்க ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மின்விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மின் விளக்குகள்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
முள்ளுப்பாடி ரெயில்வே கேட் பகுதி நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு, ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளதால் தற்போது அனைத்து பஸ்களும் மேம்பாலம் வழியாக கோவை-பொள்ளாச்சிக்கு சென்று வருகின்றன. இதனால் முள்ளுப்பாடி, குளத்துப்பாளையத்தில் இருந்து தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கோவில்பாளையத்தில் இறங்கி ஆட்டோ பிடித்து ஊருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சர்வீஸ் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் சிலரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்து வருகின்றனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு முள்ளுப்பாடி ரெயில்வே கேட் அருகில் டாஸ்மாக் கடை விற்பனையாளரை 2 நபர்கள் கத்தியால் தாக்கி விட்டு தலைமறைவாகி விட்டனர். ஆகவே, ரெயில்வே மற்றும் நெடுஞ்சாலை துறையினர் மேம்பாலத்தின் கீழ் பகுதிகளை ஆய்வு செய்து, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.