உழவர் சந்தைகள் முழு வீச்சில் செயல்படுமா?
விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் உழவர்சந்தை முழு வீச்சில் செயல்பட வேண்டும் என்ற ேகாரிக்கை எழுந்துள்ளது.
விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டில் பழைய பஸ் நிலையம் அருகே உழவர் சந்தை உள்ளது. இந்த உழவர் சந்தை கடந்த 2000-ம் ஆண்டு தற்போதைய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த போது திறந்து வைக்கப்பட்டது.
48 கடைகள்
தொடக்கத்தில் முழு வீச்சில் செயல்பட்டு வந்த இந்த உழவர் சந்தை காலப்போக்கில் செயல் இழந்து விட்டது.
இடையில் கொரோனா காலத்தில் ஓரளவு செயல்பாட்டிற்கு வந்த உழவர் சந்தை தற்போது மீண்டும் முடங்கி விட்டது. இந்த உழவர் சந்தையில் 48 கடைகள் உள்ளன. 126 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது 3 கடைகள் மட்டுமே சிறு வியாபாரிகளால் இயக்கப்பட்டு வருகிறது.
ஆன்லைன் முறையில் விற்பனை
உழவர் சந்தை திட்டம் செயல்பாட்டிற்கு வந்ததன் நோக்கமே விவசாயிகளும், பொதுமக்களும் பரஸ்பர பயனடைய வேண்டும் என்பதற்காக தான்.
இதுபற்றி இந்த உழவர் சந்தை நிர்வாக அதிகாரி ராஜாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- இந்த உழவர் சந்தையில் உறுப்பினராக உள்ள விவசாயிகள் ஆன்லைன் முறை விற்பனையை மேற்கொண்டு வருகிறார்கள். எனினும் அவர்கள் உழவர் சந்தைக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். கிராமங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
உழவர் சந்தையில் சூரிய ஒளி சக்தியில் 5 மெ.டன் அளவு கொண்ட குளிர்சாதன அறை வசதி செய்யப்பட உள்ளது. உழவர்சந்தைக்கு பஸ்வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே விரைவில் உழவர் சந்தை முழு வீச்சில் செயல்பட வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடவடிக்கை
தமிழக அரசு தற்போதைய நிலையில் ராஜபாளையம் உழவர் சந்தையை மட்டுமே மாலை நேர உழவர் சந்தையாக செயல்படுத்தி வருகிறது.
எனவே மாவட்ட தலைநகரான விருதுநகரிலும் விருதுநகரை சுற்றியுள்ள விவசாயிகளும், பொதுமக்களும் பயனடையும் வகையில் உழவர் சந்தையை முழு வீச்சில் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
101-வது உழவர் சந்தை
சிவகாசி நகரின் மையப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் உழவர் சந்தை திறக்கப்பட்டது. தமிழ்நாட்டின் 101-வது உழவர்சந்தை என்ற பெருமை இதற்கு உண்டு. விவசாயிகள் வந்து செல்ல வசதியாக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு இந்த உழவர் சந்தை சிறப்பாக செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் ஆட்சி மாற்றம் காரணமாக உழவர் சந்தை செயல்படாமல் போனது. பின்னர் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உழவர்சந்தை பழையபடி செயல்படும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்தனர். ஆனால் பெயரளவுக்கு தான் செயல்பட்டது. இந்த நிலையில் உழவர் சந்தையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று தினத்தந்தியில் செய்தி வெளியானது. இதையடுத்து மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன் மற்றும் அதிகாரிகள் உழவர்சந்தையில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த அதிகாரிகளை உழவர் சந்தையை சிறப்பாக செயல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் மேயர் ஆய்வு செய்து 40 நாட்கள் ஆன பின்னரும் இன்னும் உழவர்சந்தை பழையபடி செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் இந்த உழவர்சந்தையை செயல்பாட்டுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகமும், சிவகாசி மாநகராட்சியும் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.