சென்னைக்கு அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுமா?


சென்னைக்கு அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுமா?
x

புதுக்கோட்டையில் இருந்து நேரடியாக சென்னைக்கு அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

புதுக்கோட்டை

சமஸ்தானம்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. தனி சமஸ்தானமாக விளங்கிய புதுக்கோட்டை, நாடு சுதந்திரம் பெற்ற பின் 1948-ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தது. ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இருந்து புதுக்கோட்டை தனி மாவட்டமாக கடந்த 1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி உருவானாது. மாவட்டத்தின் தலைநகரமான புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்பட முக்கிய துறைகளின் அலுவலகங்களும் இயங்கி வருகிறது.

மேலும் கல்வி நிறுவனங்களும், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை ஏராளமாக உள்ளது. இந்த நிலையில் இருந்து புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு நேரடியாக அரசு விரைவு போக்குவரத்து பஸ்கள் இல்லாதது பயணிகளுக்கு பெரும் குறையாக உள்ளது.

இதுகுறித்து பயணிகள் தரப்பில் கூறியதாவது:-

ஆம்னி பஸ்கள்

ஜான்சிராணி:- புதுக்கோட்டையில் இருந்து நேரடியாக சென்னைக்கு அரசு விரைவு பஸ்கள் எதுவும் இல்லை. இதனால் சென்னை செல்வதற்கு பயணிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது. புதுக்கோட்டையில் இருந்து திருச்சி சென்று அங்கிருந்து அரசு விரைவு பஸ்களில் பயணம் செல்ல வேண்டி உள்ளது. அதிலும் இடம் கிடைப்பதில் கஷ்டம். நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டி உள்ளது. புதுக்கோட்டையில் இருந்து ஆம்னி பஸ்கள் இரவு நேரங்களில் அதிகம் இயக்கப்படுகிறது. இதில் கட்டணம் அதிகமாக உள்ளது.

பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விடுகின்றனர். ரூ.1,000-க்கு மேலேயும் கட்டணம் வசூலிக்கின்றனர். பொதுமக்களும் வேறு வழியில்லாமல் செல்ல வேண்டி உள்ளது. சென்னையில் கல்லூரிகளில் படிக்கும் தங்களது குழந்தைகள் விடுமுறைக்கு வரும் போது ஆம்னி பஸ்சில் தான் அனுப்பி வைக்க வேண்டி உள்ளது. இதேபோல அலுவலகம் மற்றும் பணியின் காரணமாகவும் சென்னை சென்று வர வேண்டுமானால் ஆம்னி பஸ் தான். இதனால் அரசு விரைவு பஸ்கள் இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

அரசு விரைவு பஸ்கள்

மோகன்ராஜா:- புதுக்கோட்டை தனி ஒரு மாவட்டமாக விளங்க கூடிய நிலையில் இங்கிருந்து தலைநகர் சென்னைக்கு 5 இருக்கைகள் கொண்ட சாதராண அரசு பஸ்கள் மட்டும் சில இயக்கப்படுகிறது. பக்கத்து மாவட்டமான தஞ்சாவூர், சிவகங்கையில் இருந்து அரசு விரைவு பஸ்கள் புதுக்கோட்டை வழியாக சென்னைக்கு இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் இருக்கைகள் நிரம்பி விட்டால் புதுக்கோட்டைக்குள் வராமல் பை-பாஸ் வழியாகவே சென்றுவிடும்.

மேலும் இதில் இருக்கைகள் முன்பதிவு செய்யும் இடம் கிடைப்பது அரிது. இதனால் அரசு விரைவு பஸ்களில் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய முடியாமல் தனியார் ஆம்னி பஸ்களை தேடி செல்ல வேண்டி உள்ளது. அதிலும் சில நாட்களில் இடம் கிடைப்பதில்லை. எனவே புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு நேரடியாக அரசு விரைவு பஸ்கள் இயக்க வேண்டும். போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதிகாரிகள் உடனடியாக தலையீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயனுள்ளதாக இருக்கும்

அப்துல்லா:- புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் இருக்கைகள், படுக்கைகள் வசதி கொண்ட விரைவு பஸ்கள் இயக்கினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அடிக்கடி சென்னை செல்பவர்கள் இந்த வசதியை பயன்படுத்த முடியும். இதேபோல புதுக்கோட்டையில் இருந்து வேலூர், கொடைக்கானலுக்கு இயக்கப்பட்ட பஸ்களை நிறுத்தி விட்டனர். இதனை மீண்டும் இயக்க வேண்டும்.

கூடுதல் கட்டணம்

ராஜா முகமது:- விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் சென்னைக்கு ரூ.2 ஆயிரம் வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கின்றனர். இதில் முன்பதிவு இருக்கை மற்றும் படுக்கை வசதிகள் கொண்டவை உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு பஸ் ஒன்று இயக்கப்பட்டது. அதனை நிறுத்தி விட்டனர். புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு ரெயில்கள் வசதியும் குறைவாக உள்ளது. இதனால் பஸ் போக்குவரத்தையே பொதுமக்கள் அதிகம் நாடி செல்கின்றனர். அரசு விரைவு பஸ் இயக்கப்பட்டால் சாதாரண கட்டணத்தில் பொதுமக்கள் பயணம் செய்ய முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பயணிகள் கோரிக்கை குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, ``அரசு விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.


Related Tags :
Next Story