பச்சை தேயிலை விலை உயருமா?


பச்சை தேயிலை விலை உயருமா?
x
தினத்தந்தி 22 Oct 2023 8:00 PM GMT (Updated: 22 Oct 2023 8:00 PM GMT)

வருகிற நவம்பர் மாதத்தில் பச்சை தேயிலை விலை உயருமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளார்கள்.

நீலகிரி

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் தான் சிறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதன்படி மாவட்டத்தில் 65 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள் தேயிலை சாகுபடி செய்து வருகின்றனர். இவர்கள் தங்கள் தோட்டத்தில் பறிக்கும் பச்சை தேயிலையை மாவட்டத்திலுள்ள சிறு தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகின்றனர். வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் நடைபெறும் தேயிலை ஏலத்தில் விற்பனையாகும் தேயிலை தூளின் விற்பனை விலை அடிப்படையில் பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மாதந்தோறும் தேயிலை வாரியமும் பச்சை தேயிலைக்கு மாவட்ட சராசரி விலையை நிர்ணயம் செய்து அறிவித்து வருகிறது.


தற்போது பச்சை தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தோட்டத்தை பராமரிக்க இயலாத நிலை இருந்து வருகிறது. இதனால் பச்சை தேயிலை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சமாக 30 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சிறு விவசாயிகள் கூறியதாவது:- கடந்த செப்டம்பர் மாத விலையாக பச்சை தேயிலை கிலோ ஒன்றுக்குரூ.14.50 விலை நிர்ணயம் செய்தது. இதனடிப்படையில் தேயிலை தொழிற்சாலைகள் 15 ரூபாய் வழங்கின. இந்த விலை விவசாயிகளை பாதித்துள்ளது. வார விலையை அடிப்படையாக கொண்டு மாத விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த 21-ந் தேதி சனிக்கிழமை வார விலையாக நடுத்தர தேயிலைக்கு 17 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை கடந்த 2 வாரங்களாக உள்ளது. எனவே எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நிர்ணயிக்கப்படும் பச்சை தேயிலைக்கான விலையில் உயர்வு இருக்குமா என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story