ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா?
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், வால்பாறையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
வால்பாறை,
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், வால்பாறையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பயனற்ற சோதனைச்சாவடி
கொரோனா பரவல் அதிகரித்தபோது வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் தடுப்பு நடவடிக்கைக்காக நகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, போலீசார் ஆகியோர் சார்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது. இந்த ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் கண்காணிப்பு கேமரா, பணியாளர்கள் தங்கும் இடம், வாகனங்களின் எண்களை பதிவு செய்யும் வசதி உள்பட அனைத்து வசதிகளும் உள்ளது. கொரோனா பரவல் குறைந்த பிறகு, ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி பயனற்ற நிலையில் இருந்து வருகிறது.
வருகை அதிகரிப்பு
தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் கோடை காலம் தொடங்கி விட்டதால் வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்ைக எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
விழிப்புணர்வு
கடந்த 2 ஆண்டுகளாக அந்த சோதனைச்சாவடி செயல்படாமல் கிடக்கிறது. அதை வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரவல், பிளாஸ்டிக் ஒழிப்பு, காட்டுத்தீ தடுப்பு, சுற்றுலா தலங்களில் சுகாதாரத்தை பாதுகாப்பது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பயன்படுத்தலாம். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.