ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக தமிழை கொண்டு வந்தால் நன்மை தருமா? வக்கீல்கள் கருத்து
ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக தமிழை கொண்டு வரும் பட்சத்தில் அது நீதிபதி, வக்கீல், பொதுமக்களுக்கு நன்மை தருமா?, பாதிப்பு வருமா? என்பது குறித்து கேட்டபோது வக்கீல்கள் தங்களது கருத்துகளை கூறியுள்ளனர்.
சாமானியனுக்கு தெரியாது
ஆங்கில வார்த்தைகள் இப்போது தமிழ்மொழியுடன் கலந்து அதிகம் உச்சரிக்கப்பட்டாலும், பல கடினமான ஆங்கில சொற்களுக்கு இன்றும் விளக்கம் தெரியாதவர்கள் பலர் உள்ளனர். அதுவும் சட்டம் தொடர்பான ஆங்கில சொற்களுக்கு கூடுதல் விளக்கம் தேவைப்படுகிறது. நீதி கேட்டு ஐகோர்ட்டுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் சாமானிய மனிதன் சென்றால், அங்கு நடைபெறும் வழக்கு விசாரணை குறித்து அவருக்கு எதுவும் தெரியாது.
தன் வக்கீலும், எதிர்தரப்பு வக்கீலும், நீதிபதியின் முன்பு செய்யும் ஆங்கில வாதத்தை புரிந்துகொள்ள முடியாது. அன்னிய மொழியில் நடைபெறும் இந்த வாதத்தில், தான் கொடுத்த விவரங்களை எல்லாம் நீதிபதியிடம் தன் வக்கீல் எடுத்துக்கூறினாரா? என்றும் தெரியாது.
ஜனாதிபதி அதிகாரம்
ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 348-வது பிரிவு, சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகளில் ஆங்கிலம் மட்டும்தான் அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. அதேநேரம் 348 (2) பிரிவு ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக அந்தந்த மாநில மொழியை அறிவிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என்கிறது. இந்த அதிகாரத்தின்படிதான் அலகாபாத், பாட்னா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 ஐகோர்ட்டுகளில் வழக்காடும் மொழியாக இந்தி உள்ளது.
எனவே சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளையில் தமிழை வழக்காடும் மொழியாக ஜனாதிபதி அறிவித்தால், என்னென்ன விளைவுகள் ஏற்படும்? இதுகுறித்து வக்கீல்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-
வாதத்திறமை வலுப்படும்
டி.கே.ஆர்.கணேசன் (முன்னாள் அரசு வக்கீல், கடமலைக்குண்டு):- ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வந்தால் நல்ல விஷயம் தான். தாய்மொழியில் வழக்காடும் போது அது வக்கீல்களின் வாதத் திறமையை மேலும் வலுப்படுத்தும். வக்கீல்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தங்களின் வக்கீல்கள் என்ன வாதாடுகிறார்கள் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். தமிழகத்தில் கிராமப்புற பகுதிகளில் தமிழ் வழியில் படித்து, சட்டம் படித்து வக்கீலாகும் இளம் வக்கீல்களுக்கும் தாய்மொழியில் வழக்காடுவது எளிதாக இருக்கும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தால் மகிழ்ச்சியாக வரவேற்கலாம்.
குமார் (வக்கீல், ஆண்டிப்பட்டி) :- ஐகோர்ட்டில் தமிழ் வழக்காடும் மொழியாக வர வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி கூட சமீபத்தில், மாநில ஐகோர்ட்டுகளில் அந்தந்த வட்டார மொழிகளை அலுவல் மொழியாக கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார். எனவே தமிழ் மொழியை வழக்காடு மொழியாக கொண்டு வரலாம். அதே நேரத்தில் பிறமாநிலங்களில் இருந்து வரும் நீதிபதிகளுக்கும், வக்கீல்களுக்கும் பாதிப்பு வராமல் இருக்க வேண்டும். தாய் மொழியில் வழக்காடும் போது வக்கீல்கள் வழக்கின் தன்மையை எளிதில் எடுத்துக் கூற முடியும்.
தமிழுக்கும் பெருமை
பாலமுருகன் (பெரியகுளம் வக்கீல் சங்க முன்னாள் தலைவர்) :- தமிழகத்தில் உள்ள ஐகோர்ட்டுகளில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வந்தால் தமிழுக்கும் பெருமை, வக்கீல்களுக்கும், வழக்கை நடத்தும் மனுதாரர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். கிராமப்புற பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்டு வரும் மனுதாரர்களுக்கு ஆங்கிலத்தில் வாதாடும் போது என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருப்பார்கள்.
தமிழில் வழக்காடும் போது சட்டம் குறித்தும், சட்டப்பிரிவுகள் குறித்தும் மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். தற்போது பல வக்கீல்கள் ஐகோர்ட்டுக்கு சென்று வாதாடுவதற்கு சிரமப்படுகின்றனர். எனவே ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர மத்திய அரசு மற்றும் ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாரிச்செல்வம் (வக்கீல், உத்தமபாளையம்) :- சாமானிய மக்களும் சட்டம் தெரிந்து கொள்ள வேண்டும். ஐகோர்ட்டுகளில் தினமும் பல்வேறு வழக்குகள் நடக்கின்றன. வக்கீல்கள் சிலர் நன்கு சட்ட அறிவு இருந்தும், ஆங்கிலத்தில் சரளமாக வாதாட தெரியாத பட்சத்தில் அவர்களின் பணி மாவட்ட கோர்ட்டுகளுக்குள் சுருங்கி விடுகிறது. அவர்களை ஐகோர்ட்டில் தமிழில் வாதிட அனுமதிக்கும்போது, தங்கள் தரப்பு வாதங்களை சிறப்பாக எடுத்து வைப்பார்கள்.
ஆங்கிலத்தில் வாதாடும் வக்கீல்களை விட இவர்கள் சிறப்பாக வாதாடுவார்கள். ஆங்கில தீர்ப்புகள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்த்து சட்ட இதழாக வெளியிட மாவட்ட நீதிபதி தலைமையில் தீர்ப்பு திரட்டு என்று ஒரு தனித்துறையே ஐகோர்ட்டில் உள்ளது. எனவே தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில் தாய்மொழியில் வாதம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.