பொளவக்கல் பாறையில் உள்ளவற்றாத சுனை, ஐவர் படுக்கை பகுதி சுற்றுலா தலமாக்கப்படுமா?
பரமத்தி அருகே பொளவக்கல் பாறையில் உள்ள வற்றாத சுனை மற்றும் ஐவர் படுக்கையை சுற்றுலா தலமாக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பரமத்திவேலூர்
ஐவர் படுக்கை
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் பரமத்தி அருகே உள்ளது அர்த்தநாரிபாளையம் கிராமம். இங்கிருந்து பிள்ளைக்களத்தூர் செல்லும் சாலையில் வலதுபுறத்தில் சுமார் 1 கி.மீ. தூரத்தில் உள்ளது பஞ்சபாண்டவர்கள் வந்து தங்கி இருந்ததாக கூறப்படும் பொளவுக்கல் பாறை. புராணங்களின்படி கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என நான்கு யுகங்கள் உள்ளன. இதில் சகுனியின் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் துரியோதனிடம் நாட்டை இழந்த பஞ்சபாண்டவர்கள், சூதாட்டத்தில் தோற்று போனதால் 12 ஆண்டுகள் வனவாசம் சென்றனர்.
இதில் ஒரு வருடம் அஞ்ஞாத வாசமும் (தலைமறைவு வாழ்க்கை) பஞ்சபாண்டவர்கள் மேற்கொண்டனர். பல்வேறு இடங்களில் தங்கி வனவாசம் மேற்கொண்ட பாண்டவர்கள் பரமத்தி அருகே உள்ள அர்த்தநாரி பாளையத்தில் இருந்து பிள்ளைகளத்தூர் செல்லும் சாலையில் உள்ள பொளவக்கல் பாறையில் வந்து தங்கி சென்றதற்கான, ஆதாரமாக இங்கு ஐவர் படுக்கை, வற்றாத சுனை ஒன்றும் உள்ளது.
மேலும் முன் பகுதியில் கருபண்ணசாமி கோவிலும், ஐவர் படுக்கை பகுதியில் சப்த கன்னிமார்கள் சிலையும், பாறையின் மேல் பகுதியில் முருகன் கோவிலும், பஞ்சபாண்டவர்கள் அங்கு பாண்டி விளையாடியதற்கான அடையாளங்களும் உள்ளன. சிறப்பு வாய்ந்த இப்பகுதியை குடிநீர் வசதி, கழிப்பிட வசதி செய்து கம்பிவேலி அமைத்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றவும், சுற்றுலா தலமாக மேம்படுத்தவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வற்றாத சுனை
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த 84 வயது முதியவர் பெரியசாமி கூறியதாவது:- அர்த்தனாரி பாளையத்தில் உள்ள பொளவக்கல் பாறையில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்ற போது, இங்கு வந்து தங்கி சென்றதற்கான சான்றாக ஐவர் படுக்கை உள்ளது.
பஞ்ச பாண்டவர்களுக்கு தாகம் ஏற்பட்ட போது தண்ணீருக்காக அர்ஜுனன் வில்லை எடுத்து இந்த பாறையின் மீது எய்தபோது பாறை இரண்டாக பிளந்து அங்கு சுனை உண்டானதாக புராணங்கள் கூறுகின்றன. எந்த கோடையிலும் இந்த சுனை வற்றாது. பாறையின் தென் கிழக்கு மூலையில் சுனையில் இறங்கி தண்ணீரை எடுத்து வர வசதியாக படிக்கட்டும் அமைக்கப்பட்டு உள்ளது. அர்ச்சுனன் அம்பு எய்ததால் இரண்டாக பிளந்த பாறை பகுதி தற்போது பொளவக்கல் பாறை என அழைக்கப்படுகிறது.
நோய்களை தீர்க்கும் தண்ணீர்
ஐவர் படுக்கை பகுதியில் பூஜை செய்யும் பூசாரி பாலசுப்பிரமணி:-
நான் ஐவர் படுக்கை பகுதியிலும், பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி மற்றும் மாலைய்யா, சாவக்காள் கோவில்களிலும் பூஜை செய்து வருகிறேன். ஐவர் படுக்கை பகுதியில் உள்ள சுனையிலிருந்து புனித தீர்த்த நீரை விசேஷ காலங்களில் எடுத்து வந்து, அர்த்தனாரிபாளையத்தில் உள்ள பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஸ்ரீ மாலைய்யா, ஸ்ரீ சாவக்காள் சாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த சுனை இருந்து புனித தீர்த்தத்தை எடுத்துச் சென்று கொடுத்தால், உடல் நிலைபாதிக்கப்பட்டவர்களும், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களும், அதில் இருந்து பூரண குணமடைவார்கள் என்பது ஐதீகமாக உள்ளது. இதற்காக தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு வந்து நோய் தீர்க்கும் சுனை நீரை எடுத்துச் செல்கின்றனர்.
அடிப்படை வசதிகள்
கோவில் தர்மகர்த்தா தங்கவேல்:-
வனவாச காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் இங்கு வந்து தங்கி இருந்ததற்கான அடையாளமாக இங்கு ஐவர் படுக்கை உள்ளது. பஞ்ச பாண்டவர் இங்கு தங்கி இருந்தபோது அவர்களுடைய தாகத்தை தீர்க்க அர்ஜுனன் வில்லை எடுத்து அந்த பாறையின் மீது எய்தபோது பாறை இரண்டாக பிளந்து அங்கிருந்து சுனை நீர் உண்டானதாகவும் அதை அவர்கள் பருகி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சுனை நீர் எவ்வளவு கோடை காலத்திலும் வற்றுவது இல்லை. ஐப்பசி மாதத்தில் இங்கு வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்ற ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். எனவே இப்பகுதியை சுற்றுலா தலமாக அறிவித்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.