புதுக்கோட்டையில் பருவம் தவறி மழை பெய்யுமா?
புதுக்கோட்டைக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுத்த நிலையில் வெயில் அடித்தது. பருவம் தவறி மழை அதிகம் பெய்யுமா? என கேள்வி எழுந்துள்ளது.
பருவ மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி முதல் தொடங்கியது. ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்ய தொடங்கியது. முதல் நாளில் லேசாக தூறல் மழை பெய்தது. அதன்பின் கடந்த ஓரிரு நாட்களாக வெயில் அடித்தது. இரவு நேரங்களில் லேசாக மழை தூறியது. ஆனால் பெரிய அளவில் மழை எதுவும் பெய்யவில்லை.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கடந்த 2 நாட்களாக ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டு கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை பெய்யவில்லை. புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் இரவு லேசாக தூறல் மழை பெய்தது. இதேபோல் நேற்று காலையில் புதுக்கோட்டையில் ஒரு சில இடங்களில் சில நிமிடங்கள் தூறல் மழை பெய்து நின்றது. பகலில் வெயில் அடித்தது. மழைக்கான அறிகுறி போல் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழைக்கான வாய்ப்பு இல்லாமல் போனது.
விராலிமலை
விராலிமலையில் நேற்று காலை 11 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு பரவலாக பெய்தது. கடற்கரை பகுதிகளான மணமேல்குடி, கட்டுமாவடி, கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சற்று சிறிது தூறல் மழையோடு நின்றது. புயல் எச்சரிக்கை, மழை அதிகம் எதுவும் இல்லாததால் மீனவர்கள் மீன்பிடிக்க வழக்கமாக செல்வதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனமழை பெய்யக்கூடிய இந்நேரத்தில் மழை அதிகம் இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேநேரத்தில் மழை பெய்வது போல் வானம் மேகமூட்டத்துடன் திரண்டு கலைந்து சென்றுவிடுகிறது.
பருவம் தவறி மழை
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ''புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மழை அதிகமாக எதுவும் பெய்யவில்லை. கடந்த ஆண்டுகளில் பருவம் தவறி மழை அதிகமாக பெய்துள்ளது. அதாவது வடகிழக்கு பருவமழை சீசன் முடிந்த பின் ஜனவரி மாதத்தில் அதிகம் மழை பெய்துள்ளது. அதுபோல் தற்போதும் பெய்யுமா? என்பது சந்தேகமாக உள்ளது. இதற்கு காரணம் சீதோஷ்ண நிலையில் மாற்றம் தான்'' என்றார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த காலங்களில் பருவம் தவறி ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை அதிகம் மழை பெய்துள்ளது. பொதுவாக மார்கழி மாதத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் போது மழை இருக்காது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் மழைப்பதிவு
அந்த வகையில் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் முடிய பருவம் தவறி மழை பெய்ததில் கடந்த 2017-ம் ஆண்டு 2 ஆயிரத்து 950.7 மில்லி மீட்டர் அளவும், கடந்த 2018-ம் ஆண்டு 2 ஆயிரத்து 468.2 மில்லி மீட்டரும், கடந்த 2020-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 44.5 மில்லி மீட்டரும், கடந்த 2021-ம் ஆண்டில் ஆயிரத்து 412.8 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின் போது கடந்த 2021-ம் ஆண்டு 15 ஆயிரத்து 637 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.