காரைக்குடி-திருச்சி 'டெமு' ரெயில் மீண்டும் இயக்கப்படுமா?


காரைக்குடி-திருச்சி டெமு ரெயில் மீண்டும் இயக்கப்படுமா?
x

புதுக்கோட்டை வழியாக காரைக்குடி-திருச்சி ‘டெமு’ ரெயில் மீண்டும் இயக்கப்படுமா என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

புதுக்கோட்டை

'டெமு' ரெயில்

புதுக்கோட்டை வழியாக விருதுநகர்-திருச்சி பயணிகள் ரெயில் இயங்கி வந்தது. மீட்டர் கேஜ் பாதை காலத்தில் இருந்து இந்த ரெயில் சேவை உள்ளது. அகல ரெயில்பாதை ஆனபின்பும் தொடர்ந்தது. திருச்சியில் இருந்து விருதுநகர் வரை உள்ள சுமார் 217 கி.மீ. கொண்ட ரெயில் பாதையில் இந்த ரெயில் 5.30 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து பயணமாகும். பயணிகள் ரெயிலான இதில் கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் 150 கி.மீ. மேல் இயங்கும் ரெயில்களில் கழிவறை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என்ற ரெயில்வே விதி உள்ளது. இருப்பினும் நிர்வாக காரணங்களுக்காக இந்த ரெயில் 2 எண்களை கொண்ட ெரயிலாக சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டது. அதாவது திருச்சி-காரைக்குடி இடையே 76839/40 என்ற வண்டி எண்ணும், காரைக்குடி-விருதுநகர் இடையே 76837/38 என்ற வேறொரு ரெயில் வண்டி எண்ணுடனும் ஒரே ரெயில் பெட்டிகளுடன் தொடர்ந்து இயங்கும் ரெயிலாக மாற்றப்பட்டது. இருந்தாலும் பயணிகளை பொறுத்தவரை இது விருதுநகர்-திருச்சி டெமு ரெயில் என்றே அழைக்கப்பட்டது.

கொரோனாவால் நிறுத்தம்

விருதுநகரில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு காலை 10.34 மணிக்கு வந்து 10.35 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு பகல் 11.50 மணிக்கு செல்லும். ஞாயிறு தவிர மற்ற நாட்களில் இந்த ரெயில் இயங்கி வந்தது. மறுமார்க்கத்தில் திருச்சியில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு மாலை 4.44 மணிக்கு வந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு விருதுநகருக்கு இரவு 9.35 மணிக்கு செல்லும்.

இந்த ரெயில் சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் இயங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த ரெயில் நிறுத்தப்பட்டது. அதன்பின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் விருதுநகர்-காரைக்குடி ரெயில் மட்டும் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதன் இணை ரெயிலான காரைக்குடி-திருச்சி ரெயில் இன்னும் இயக்கப்படவில்லை.

கோரிக்கை

தற்போது இயக்கப்படும் விருதுநகர்-காரைக்குடி டெமு ரெயில் காரைக்குடி சந்திப்பில் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. காரைக்குடியோடு நிறுத்தப்படுவதால் விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை போன்ற பகுதிகளிலிருந்து புதுக்கோட்டை, திருச்சி வரும் பயணிகள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர். அதுபோல பகலில் புதுக்கோட்டையிலிருந்து சிவகங்கை, அருப்புக்கோட்டை, விருதுநகர் போன்ற பகுதிகளுக்கு பயணிக்க முடியாத நிலை தொடர்கிறது.

மேலும் இந்த ரெயிலை அதிகம் பயன்படுத்துவது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தான். எனவே மாணவர்களின் நலன் கருதி, 2 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்படாமல் உள்ள விருதுநகர்-காரைக்குடி ரெயிலின் இணை ரயிலான 76839/40 காரைக்குடி-திருச்சி 'டெமு' ரெயிலை உடனடியாக இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story