நெய்வேலி விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா?நீண்டகால கனவுகளுடன் காத்திருக்கும் மக்கள்


நெய்வேலி விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா?நீண்டகால கனவுகளுடன் காத்திருக்கும் மக்கள்
x

நெய்வேலி விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா? என மக்கள் நீண்டகால கனவுகளுடன் காத்திருக்கின்றனா்.

கடலூர்

போக்குவரத்து! ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. எங்கோ கடைகோடியில் இருக்கும் சிறு கிராமங்களை பெரும் நகரத்தோடு இணைப்பதில் இன்றியமையாதது போக்குவரத்து வசதி.

பொருளாதாரம் சார்ந்த வாய்ப்புக்களுக்காக கிராமப்புறங்களில் இருந்து நகரப்புறங்களுக்கு இன்று மக்கள் இடம்பெயர்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் சார்ந்து இருப்பது பஸ், ரெயில் போக்குவரத்தே ஆகும். இதற்கு அடுத்தப்படியானது விமானம். என்றாவது ஒருநாள் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்கிற கனவு ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும். அப்படி நீண்டகால கனவுகளுடன் இருப்பவர்கள் தான் கடலூர் மாவட்ட மக்கள். ஆம், கடலூர் மாவட்டத்தில் உள்ளது நெய்வேலி. இங்கு பழுப்பு நிலக்கரி சுரங்கம், அனல் மின் நிலையம் ஆகியவை உள்ளன. கடலூர் மாவட்டத்திலேயே மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நகரங்களில் நெய்வேலியும் ஒன்றாகும். மேலும் கடலூர் மாவட்டத்திலேயே முதன் முதலாக விமான போக்குவரத்து நடந்ததும் இங்கு தான்.

குட்டி விமானம்

ஆம், கடந்த 1987-ம் ஆண்டு சென்னையில் இருந்து நெய்வேலிக்கு விமானம் விட வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடப்பட்டது. அதை அரசு பரிசீலித்து, குட்டி ரக விமானங்களை ("வாயுதூத்") விட அரசு சம்மதம் தெரிவித்தது. அதற்காக நெய்வேலி டவுன்ஷிப் அருகில் தேசிய நெடுஞ்சாலையோரம் சுமார் 220 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து சென்னைக்கும், நெய்வேலிக்கும் இடையே கடந்த 8.6.1987 அன்று முதன் முறையாக குட்டி விமான போக்குவரத்து தொடங்கியது. இந்த விமான போக்குவரத்தை அப்போதைய "என்.எல்.சி." தலைவராக இருந்த நாராயணன் தொடங்கி வைத்தார்.கடந்த காலங்களில் முக்கிய நகரங்களுக்கு இடையேயான குட்டி விமானப் போக்குவரத்தை "வாயுதூத்" விமான போக்குவரத்து கம்பெனி தான் நடத்தியது.

45 நிமிட பயணம்

இதையடுத்து சென்னையில் இருந்து நெய்வேலிக்கு ஞாயிற்றுக்கிழமைகள் தவிர பிற எல்லா நாட்களிலும் குட்டி விமானம் இயக்கப்பட்டது. சென்னையில் இருந்து நெய்வேலிக்கு வெறும் 45 நிமிட பயணம் என்பதால், வசதி படைத்த பலர் குட்டி விமானத்தில் பயணம் மேற்கொள்ளவே அதிக ஆர்வம் காட்டினர். காரணம் கார், பஸ் உள்ளிட்டவற்றில் பயணிப்பதை விட குட்டி விமானத்தில் செல்வதால் சுமார் 4 மணி நேரம் மிச்சமானது.

ஆனால் அந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 19 பேர் மட்டுமே பயணம் செய்யலாம். அப்போது ஒரு நபருக்கு கட்டணமாக 215 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதேபோல் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர எல்லா நாட்களிலும் கோவைக்கும் குட்டி விமானம் இயக்கப்பட்டது.

விமான சேவை நிறுத்தம்

ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த விமான போக்குவரத்து நாளடைவில் மக்கள் பயணிக்க ஆர்வம் காட்டாததாலும், வருமான இழப்பு ஏற்பட்டதாலும் குறுகிய காலத்திலேயே விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வந்து பணிபுரிகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு எளிதில் சென்றுவரும் வகையில் நிறுத்தப்பட்ட விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், தேசிய சிவில் விமான போக்குவரத்து கொள்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி குறைந்த கட்டணத்தில் ஏழை, எளிய மக்களும் விமான பயணம் மேற்கொள்ள, விமான போக்குவரத்து இணைப்பு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த திட்டமிட்டது.

கட்டுமான பணிகள்

இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நெய்வேலி, சேலம், ஓசூர் பகுதிகளில் இருந்து விமான சேவையை தொடங்க மத்திய அரசுடன், தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. அதன் அடிப்படையில் நெய்வேலியில் என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமான தளம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புனரமைக்கப்பட்டது. மேலும் 1,200 மீட்டர் ஓடுதளம், சுற்றுச்சுவர், பயணிகள் காத்திருப்பு அறை உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடந்து முடிந்தது.

இந்த விமான நிலையத்தின் பாதுகாப்பு பணிகளில் கூடுதல் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களை பணி அமர்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் இப்பணிகள் நடந்து முடிந்து ஆண்டுகள் பல கடந்தாலும், அதனை செயல்படுத்த இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபாடில்லை. இதற்கிடையே நெய்வேலி விமான நிலையம் ஓரிரு மாதங்களில் இயங்க தொடங்கும் என கடந்த ஏப்ரல் மாதம் மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கூறினார். ஆனால் இதுவரை அதனை செயல்படுத்த எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.அதனால் கடலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான நெய்வேலியில் இருந்து விமான சேவை திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீண்டும் செயல்படுமா?

இதுகுறித்து நெய்வேலி பகுதி மக்கள் கூறுகையில், நெய்வேலி பகுதி மக்கள் சென்னைக்கு செல்ல கடந்த காலங்களில் மிகவும் சிரமப்பட்டனர். சென்னைக்கு செல்லவேண்டுமானால் பஸ் அல்லது கார்களில் தான் செல்ல வேண்டும். ரெயில் வசதி கூட கிடையாது. ஏதேனும் அவசர தேவைக்கு கூட உடனடியாக செல்ல முடியாத நிலை இருந்தது. அதனால் மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நெய்வேலியில் இருந்து சென்னைக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டது.

ஆனால் ஏதோ காரணத்தால் சில ஆண்டுகளிலேயே விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மீண்டும் விமான சேவையை தொடங்க, விமான நிலையம் புனரமைக்கப்பட்டது. ஆனால் பணிகள் முடிந்தும், விமான சேவை மட்டும் தொடங்கவில்லை. இதனால் நெய்வேலி மட்டுமல்லாது கடலூர் மாவட்ட மக்கள் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏதேனும் அவசர தேவைக்கு கூட உடனடியாக செல்ல முடியாத நிலை உள்ளது. அதனால் நெய்வேலியில் நிறுத்தப்பட்ட விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றனர்.


Next Story