பழையார் மீன்பிடி துறைமுகம் மேம்படுத்தப்படுமா?


பழையார் மீன்பிடி துறைமுகம் மேம்படுத்தப்படுமா?
x

பழையார் மீன்பிடி துறைமுகம் மேம்படுத்தப்படுமா?

மயிலாடுதுறை

6 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பழையார் மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பக்கிங்காம் கால்வாயில் படகு அணையும் தளம் அமைக்கவும் மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பழையார் மீன்பிடி துைறமுகம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையார் கிராமம் உள்ளது. கொள்ளிடம் ஆறு வங்கக்கடலில் கலக்கும் இடமாக இருப்பதால் இந்த பகுதியில் இயற்கை துறைமுகமாக விளங்கி வருகிறது. துறைமுகத்தின் மூலம் கொடியம் பாளையம், மடவாமேடு, கூழையார், திருமுல்லைவாசல், தொடுவாய் உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவைக்கவும், பல்வேறு பகுதிகளில் பிடித்து வந்த மீன்களை இறக்குவதற்கும் பழையார் துறைமுகத்தை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் ரூ.34 கோடி மதிப்பில் பழையார் மீன்பிடி துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

பராமரிப்பு பணிகள்

இதன் மூலம் பல்வேறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் பழையார் மீனவர்கள் படகுகளை நிறுத்துவதற்கும், மீன்களை இறக்குவதற்கும் பயன்படுத்தி வந்தனர். தொடர்ந்து பழையார் துறைமுகத்தில் எந்த பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் இருந்து வந்ததால் தற்போது மீன் ஏலக்கூடம், உயர் கோபுர விளக்கு, ஐஸ் பிளாண்ட், கருவாடு உலரும் தளம், கடல் நீரை குடிநீராக ஆகும் திட்டம் கட்டிடம் மற்றும் படகு அணையும் தளம் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகிறது.

டீசலுக்கு மானியம்

இதுகுறித்து விசைப்படகு உரிமையாளர் சங்கத்தில் கூறுகையில்,

பழையார் துறைமுகத்தில் 400 விசை படகுகள் மற்றும் 500 நாட்டுப்படகுகள் உள்ளன. 6 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரமாக பழையார் துறைமுகம் விளங்குகிறது. இங்கு பிடிக்கப்படும் மீன்கள் கேரளா, ஆந்திரா மற்றும் வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது துறைமுகத்தில் மீன் ஏலகூடங்கள் மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. மேலும் பழையார் துறைமுகத்தில் படகுகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்வதால் மீனவர்கள் மழைக்காலங்களில் படகுகளை நிறுத்துவதற்கு இடம் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மீனவர்களின் நலன் கருதி பழையார் துறைமுகம் அருகில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் படகு அணையும் தளம் அமைக்க கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மீனவர்களுக்கு வழங்க வேண்டிய டீசலுக்கு கூடுதல் மானியம் வழங்க வேண்டும் என்றார்.

வடிகால் வசதி

இதுகுறித்து பழையார் கருவாடு வியாபாரிகள் சங்க தலைவர் பொன்னையா கூறுகையில்,

கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட வெள்ள நீரால் மீனவர்கள் கடந்த ஒரு மாத காலமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. தண்ணீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக கொள்ளிடம் ஆறு பழையார்கடலில் கலக்கும் இடத்தில் மணல்மேடுகள் குவியப்பட்டுள்ளதால் அப்பகுதியில் ஆற்றின் முகப்புதூர்ந்து போய் உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாமல் படகுகள் சேதம் அடைந்து மீனவர்கள் உயிர் தப்பி வரும் நிலை ஏற்படுகிறது.

இதற்கு அந்த பகுதியில் கருங்கல் பாறைகளை கொட்டி தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மழைக்காலங்களில் பழையார் துறைமுக பகுதிகளில் அதிக அளவில் கழிவு நீர்கள் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே மீனவர்கள் நலன் கருதி வடிகால் வசதியை ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.


Next Story