பொள்ளாச்சி சந்தை மீண்டும் பொலிவு பெறுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு


பொள்ளாச்சி சந்தை மீண்டும் பொலிவு பெறுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி சந்தை மீண்டும் பொலிவு பெறுமா? என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி சந்தை மீண்டும் பொலிவு பெறுமா? என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.

பாரம்பரிய சந்தை

பொள்ளாச்சி என்றாலே சந்தை தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு பொள்ளாச்சி சந்தை பாரம்பரியமிக்க பெரிய சந்தையாகும். சந்தையில் காய்கறி, பழங்கள், துணிகள், மளிகை பொருட்கள் என அனைத்து வகையான பொருட்களும் கிடைக்கும். பல சினிமா படங்களுக்கு படப்பிடிப்பு தளமாகவும் சந்தை விளங்கி உள்ளது. சினிமா பாடல்களில் கூட சந்தையின் பெயரை பயன்படுத்தி உள்ளனர். அந்த அளவுக்கு பெயர் போன சந்தை இன்று காணாமல் போய் விட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது:-

சந்தையில் வியாபாரம் செய்து வரும் காளியம்மாள்:-

50 ஆண்டுகளாக சந்தையில் வியாபாரம் செய்து வருகின்றேன். பொள்ளாச்சி சந்தைக்கு கேரளா மற்றும் கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இருந்து பொருட்கள் வாங்குவதற்கு வருவார்கள். தற்போது சந்தையில் மாடு, ஆடுகளை விற்பனை செய்வது போன்று குதிரை, கழுதையை கூட விற்பனை செய்து உள்ளனர். ஆனால் இன்று கிராமங்களிலும் சந்தை போடப்படுவதால் யாரும் பொள்ளாச்சிக்கு சந்தைக்கு வருவதில்லை. இதனால் நாளடைவில் சந்தையின் பரப்பளவு குறைந்து, சுருங்கி விட்டது. பாரம்பரியமாக நடந்த சந்தையை மீட்க வேண்டும்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

முத்துக்குமார்:- சந்தைக்கு அருகில் பொள்ளாச்சி ரெயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனால் கேரளாவில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் வந்து பொருட்களை வாங்கி செல்வார்கள். கடந்த 2019-ம் ஆண்டு வரை 30 சதவீத சந்தை நடந்தது. ஆனால் கொரோனாவிற்கு சந்தை கூடவில்லை. தள்ளுவண்டிகளில், சாலையோரங்களில் காய்கறி, பழங்களை விற்பனை செய்கின்றனர். இதனால் சந்தையில் பொருட்கள் விற்பனை இல்லை. வேறு வழியில்லாமல் கடைகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றோம். மீண்டும் சந்தையை நடத்தினால் தான் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியும். எனவே சந்தையை நடத்த மாவட்ட நிர்வாகமும், நகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சியில் மீண்டும் சந்தை நடக்கிறது என்பது குறித்து அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஊராட்சிகளில் சந்தை

சந்திரகுமார்:- இதற்கு முன் பெரிய வணிக நிறுவனங்கள் இல்லை. ஆனால் தற்போது வணிக நிறுவனங்களில் மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்து விடுகிறது. கிராமங்களில் கூட வணிக நிறுவனங்கள் பெருகி வருகிறது. இதற்கிடையில் பொள்ளாச்சியை சுற்றியுள்ள ஊராட்சிகளில் சந்தை நடத்தப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் யாரும் சந்தைக்கு வருவதில்லை. எனவே பொள்ளாச்சியை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் சந்தை நடத்த தடை விதிக்க வேண்டும். அப்போது பொள்ளாச்சி சந்தைக்கு வியாபாரிகள், பொதுமக்கள் வருவார்கள். மீண்டும் சந்தை பொலிவு பெறுவதற்கான சாத்திய கூறுகள் ஏற்படும்.

ஆன்லைன் வர்த்தகம்

அப்துல்லா:- தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பாரம்பரியத்தை இழந்து வருகிறோம். இதில் பொள்ளாச்சி சந்தையும் ஒன்று. கையில் செல்போனை வைத்துக் கொண்டு காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கி வருகிறோம். இன்று உணவு பொருட்கள் கூட ஆன்லைனில் வாங்கி சாப்பிட தொடங்கி விட்டோம்.

பொள்ளாச்சி சந்தை தென்னிந்தியாவில் மிகப்பெரிய சந்தையாகும். ஆனால் இன்று சந்தை இருந்த இடத்தை தேட வேண்டிய நிலை உள்ளது. சந்தை அழிந்து வருவதால் தற்போது உள்ள தலைமுறையினருக்கு சந்தை பற்றி தெரிவதில்லை. பொள்ளாச்சிக்கு புகழ் சேர்க்க சந்தைக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும்.


Next Story