கொப்பரை தேங்காய் கொள்முதல் நீட்டிக்கப்படுமா?


கொப்பரை தேங்காய் கொள்முதல் நீட்டிக்கப்படுமா?
x

நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப்படாததால் கொப்பரை தேங்காய் கொள்முதல் நீட்டிக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப்படாததால் கொப்பரை தேங்காய் கொள்முதல் நீட்டிக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

கொப்பரை தேங்காய்

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகளின் காரணமாக, தற்ேபாது தேங்காய் விளைச்சல் அதிகரித்து உள்ளது. எனினும் ஒரு தேங்காய் ரூ.10-க்குத்தான் விற்பனை ஆகிறது. இந்த விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய அரசு விலை ஆதார திட்டத்தின் கீழ் கொப்பரை தேங்காய்க்கு(கிலோ) ரூ.105.90 என்று ஆதார விலையை நிர்ணயம் செய்தது. தொடர்ந்து செஞ்சேரிமலை, நெகமம், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், அன்னூர் பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன.

கொள்முதல் நீட்டிப்பு?

இந்த நிலையில் கடந்த மாதம் 31-ந் தேதியுடன் கொப்பரை தேங்காய் கொள்முதல் காலம் முடிந்தது. ஆனால் தற்போது உற்பத்தி அதிகரித்து உள்ளதால், கொள்முதலை நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து தென்னை உற்பத்தியாளர்கள் சங்க மாநில பிரதிநிதி தங்கவேல் என்பவர் கூறியதாவது:-

கொப்பரை தேங்காய் கொள்முதல் நிறுத்தப்பட்டு உள்ளதால், வெளிமார்க்கெட்டிலும் விலை குறைந்து உள்ளது. விநாயகர் சதுர்த்தி, ஓணம், ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை ஆகியவை வருவதால் வடமாநிலங்களில் கொப்பரை தேங்காய் அதிகமாக தேவைப்படும். இதன் காரணமாக தனியார் நிறுவனங்கள், இடைத்தரகர்கள் சிண்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு கொப்பரை தேங்காயை வாங்குகின்றனர். எனவே கொப்பரை தேங்காய் கொள்முதலை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்கள்.

6,212 மெட்ரிக் டன்

ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் 10 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. தென்மேற்கு பருவமழையின் காரணமாக கொப்பரை தேங்காய் உற்பத்தி குறைந்தது. இதனால் கொள்முதல் குறைந்தது.

அரவை கொப்பரை தேங்காய் கிலோ ரூ.105.90-க்கும், பந்து கொப்பரை தேங்காய் கிலோ ரூ.110-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த மாதம் வரை 4,658 விவசாயிகளிடம் இருந்து 6,212 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டது. இதற்காக விவசாயிகளுக்கு ரூ.45 கோடியே 72 லட்சத்து 50 ஆயிரம் கொடுக்கப்பட்டு உள்ளது. நிலுவையில் உள்ள ரூ.20 கோடியை விவசாயிகளுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான ஆவணங்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் கொள்முதலை நீட்டிக்க அரசிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story