சாலையோர மரங்கள் பாதுகாக்கப்படுமா?


சாலையோர மரங்கள் பாதுகாக்கப்படுமா?
x
தினத்தந்தி 26 Oct 2023 7:30 PM GMT (Updated: 26 Oct 2023 7:30 PM GMT)

சாலையோர மரங்கள் பாதுகாக்கப்படுமா? என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

திருவாரூர்

சாலையோர மரங்கள் பாதுகாக்கப்படுமா? என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வெட்டி வீழ்த்தப்படும் மரங்கள்

நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும். அதுபோல பருவம் தவறி மழை பெய்யும்போதும், வெயில் சுட்டெரிக்கும்போதும் தான் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுகிறது. இயற்கையின் அருட் கொடையான மரங்களின் அருமையை இன்று பலரும் உணர்ந்துள்ளனர். இதன் காரணமாக மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற விழிப்புணர்வு குரல் எங்கும் ஒலிக்கிறது.

பருவ நிலை பாதிப்பு காரணமாக வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற இலக்கை நோக்கி ஒட்டுமொத்த சமூகமும் வீறு நடை போட்டு வருகிறது. அதே நேரத்தில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மரங்கள் எந்தவித மாற்று திட்டங்களும் இன்றி வெட்டி வீழ்த்தப்படுகிறது.

பாதுகாப்பதில் கவனம்

தொழில் வளர்ச்சியினால் மாசடைந்த காற்கை தூய்மைபடுத்துபவை மரங்கள். மனிதன் உயிர் வாழ தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக செயல்படும் மரங்கள் வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தருகிறது.

மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவதை போல், ஓங்கி வளர்ந்த மரங்களை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையை இருவழிச்சாலையாக மாற்றும் திட்டத்தில் சாலையோரம் இரு புறங்களிலும் இருந்த மரங்கள் முற்றிலும் வெட்டி அகற்றப்பட்டது.

விளம்பர பலகை

மன்னார்குடி, மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, கும்பகோணம் ஆகிய சாலைகளில் மட்டுமே சாலையோர மரங்கள் எஞ்சி உள்ளன. இந்த மரங்களும் விளம்பர பலகையை சுமந்து நிற்கிறது. விளம்பர பலகையை தொங்க விடுவதற்காக மரங்கள் மீது ஆணி அடித்து அதை நாசம் செய்கிறார்கள்.

திருவாரூர் மாவட்டத்தில் சாலையோர மரங்களை பராமரிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை என்பது இயற்கை ஆர்வலர்களின் வேதனையாகும்.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர் வனம் கலைமணி கூறியதாவது:-

வெளிநாட்டு மரங்கள்

சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வந்தாலும், அவற்றை பராமரிக்க எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இது ஒரு புறம் இருக்க நம் முன்னோர்கள் சாலையோரங்களில் நட்டு வளர்த்த பழமையான மரங்களும் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அகற்றப்படுகின்றன. சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற விதியை யாரும் பின்பற்றுவதில்லை. கோடிக்கணக்கில் செலவு செய்து சாலைகள் அமைக்கும்போது, அதில் சிறு தொகையையாவது மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

குறுகிய காலத்தில் வளரக்கூடிய வெளிநாட்டு மரங்களை சாலையோரங்களில் நடுவதால் எந்தவித பயனும் கிடையாது. அவை பலத்த காற்றில் சாய்ந்து விடுகின்றன. எனவே மா, நாவல் உள்ளிட்ட மரங்களை வளர்க்க வேண்டும்.

தண்டனைக்குரிய குற்றம்

சாலையோர மரங்களில் விளம்பர பலகைகளை மாட்டுவது வனச்சட்டத்தின்படி தண்டனைக்குறிய குற்றமாகும். ஆனால் பல இடங்களில் இது கடைபிடிக்கப்படுவதில்லை. இதை தடுத்து சாலையோர மரங்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story