அய்யன்கொல்லியில் புதர்சூழ்ந்த கழிப்பறை பராமரிக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
அய்யன்கொல்லியில் புதர்சூழ்ந்த கழிப்பறை பராமரிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பந்தலூர்
பந்தலூர் அருகே தமிழக-கேரள எல்லையில் அய்யன்கொல்லி உள்ளது. இந்த பகுதி பந்தலூரில் இருந்து சுல்த்தான்பத்தேரி செல்லும் இணைப்பு சாலையில் உள்ளது. கூடலூரில் இருந்து பந்தலூர் வழியாக அரசு பஸ்கள், கேரள அரசு பஸ்கள் அய்யன்கொல்லிக்கு வந்து செல்கின்றன. இதனால் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள், 2 மாநில பயணிகள் என ஏராளமானோர் தினமும் அய்யன்கொல்லிக்கு வந்து செல்கின்றனர். இதற்கிடையே அங்குள்ள பொது கழிப்பறை பராமரிப்பு இன்றி, புதர் மண்டி காணப்படுகிறது. விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறி விட்டது. இதன் காரணமாக கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் பயணிகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும் கழிப்பறை பராமரிக்கப்படாமல் உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே, கழிப்பறையை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.