'டாஸ்மாக்' கடைகளில் மதுபான விற்பனை நேரம் குறைக்கப்படுமா?
நீதிமன்றத்தின் யோசனையை அரசு பரிசீலிக்குமா? ‘டாஸ்மாக்' கடைகளில் விற்பனை நேரம் குறைக்கப்படுமா? இதுபற்றி பொதுநல விரும்பிகள் என்ன கருதுகிறார்கள் என்பதை இனி பார்ப்போம்.
பீடி, சிகரெட்டு புகைப்பது உடல் நலத்துக்கு கேடு என்று விளம்பரப் படுத்திக்கொண்டு விற்பனை செய்வது போல், குடி குடியைக் கெடுக்கும் என்று விளம்பரம் செய்துகொண்டு மதுவை விற்றுவருகிறோம்.
அரசுக்கு அதிக வருவாய் வரும் துறைகளில் 'டாஸ்மாக்' முக்கியப் பங்கு வகிக்கிறது. விலை ஏறினாலும் மதுபானங்கள் விற்பனை மட்டும் குறைவது இல்லை. மதுபோதைக்கு அடிமையாகி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. ஆண்கள் மட்டுமல்ல இளம்பெண்கள்கூட இதற்கு விதிவிலக்கு அல்ல.
சிலதினங்களுக்கு முன்பு சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டிவந்து, போலீசாரிடம் சிக்கிய இளம்பெண் ஒருவர் செய்த அலப்பறையை யாரும் மறந்திருக்க முடியாது.
21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற உத்தரவு அமலில் இருந்தாலும் பெரும்பாலான கடைகளில் இது பின்பற்றப்படுவது இல்லை. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கைகளிலும் மதுபாட்டில்கள் தவழ்வதை சமூக வலைத்தளங்களில் வெளியாகும் 'வீடியோ' பதிவுகள் மூலம் காண முடிகிறது.
மது ஒருபுறம் சமூகத்தைச் சீரழித்து வந்தாலும், இன்னொருபுறம் மதுவுக்கு எதிராக குரல் ஒலித்துக் கொண்டுதான் வருகிறது.
பொதுநல வழக்கு
'ஒட்டுமொத்த இந்தியாவில் மது விற்பனையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. மது விற்பனையை கட்டுப்படுத்த, அதன் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை குறைக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு நடந்து வருகிறது. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு அந்த பொதுநல மனுவை தாக்கல் செய்து இருந்தார்.
வழக்கை பல கட்டங்களாக விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் கடந்த 5-ந்தேதி பிறப்பித்த உத்தரவில், '21 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதில்லை என்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். பொது நலன் கருதி 'டாஸ்மாக்' கடைகளை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்' என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
நீதிமன்றத்தின் யோசனையை அரசு பரிசீலிக்குமா? 'டாஸ்மாக்' கடைகளில் விற்பனை நேரம் குறைக்கப்படுமா? இதுபற்றி பொதுநல விரும்பிகள் என்ன கருதுகிறார்கள் என்பதை இனி பார்ப்போம்.
அரசுக்கு இழப்பு
கோபால் (திண்டுக்கல் மாவட்ட சி.ஐ.டி.யு. டாஸ்மாக் ஊழியர்கள் சங்க மாநில குழு உறுப்பினர்) :- டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது. ஆனால் தனியார் பார்கள் செயல்படுவதற்கு நேர கட்டுப்பாடு எதுவும் இல்லை. இதனால் டாஸ்மாக் கடைகள் செயல்படாவிட்டாலும், தனியார் பார்களில் மது விற்பனை நடக்கத்தான் செய்யும். அதே நேரம் டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைக்கப்பட்டால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும்.
புவனேஸ்வரி (குடும்ப தலைவி, கூட்டுறவு நகர், திண்டுக்கல்) :- மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்து இருக்கிறது. பல பெண்கள் அவர்களின் கணவரை இழந்து விதவையாக மாற மதுவே முக்கிய காரணமாக உள்ளது. எனவே மதுபான கடைகளை மூட வேண்டும் என்பது தான் பெரும்பாலான குடும்ப தலைவிகளின் எதிர்பார்ப்பு. இந்த நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மகிழ்ச்சியை தரும் ஒரு ஆலோசனையை தான் அரசுக்கு ஐகோர்ட்டு வழங்கியிருக்கிறது. டாஸ்மாக் கடைகளின் நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்பதை வரவேற்கிறேன்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
புகழேந்தி (கல்லூரி மாணவர், நத்தம்) :- மாணவர்களை அவர்களின் இலக்கை நோக்கி செல்ல விடாமல் மதுவின் பாதையில் இழுத்து செல்வதில் டாஸ்மாக் கடைகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. எனவே டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க வேண்டும் என்ற யோசனையை ஐகோர்ட்டு வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் மதுவுக்கு மாணவர்கள் அடிமையாவது படிப்படியாக குறையும். அவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படாது. டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்திரகலா (குடும்ப தலைவி, மீனாட்சிபுரம்):- மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுபவர்களால் பெண்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். இரவு, பகல் என பாராமல் தங்களின் குடும்பத்தையும் கவனிக்காமல் மதுவின் போதையில் மயங்கி கிடப்பவர்களை மீட்கும் முதற்கட்ட முயற்சியாகவே ஐகோர்ட்டின் யோசனையை பார்க்க வேண்டும். இந்த யோசனையை ஏற்று அரசு டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைத்தால் வருமான இழப்பு ஏற்படும் தான். ஆனால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் அரசுக்கு நன்றி சொல்லும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மது விற்பனை நேரத்தை குறைப்பதன் மூலம் இந்தியாவில் மது விற்பனையில் தமிழ்நாடு முதலிடம் என்ற அவலநிலையும், மதுபிரியர்களின் மனநிலையும் மாறும் என்ற பொதுநலன் சிந்தனையோடு நீதிபதிகள் 'டாஸ்மாக்' கடை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தாலும், இது கள்ளச்சந்தை மது விற்பனையை அதிகரிக்கும் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது.